Nayanthara, Vignesh Sivan Rowdy Pictures
கோலிவுட் செய்திகள்

"இந்த அங்கீகாரம் ஊக்கமாக அமைந்துள்ளது" - நயன்தாரா - விக்னேஷ் சிவன் நன்றிக்குறிப்பு | Nayanthara

ரசிகர்களுக்கு பிடித்த வகையிலும் அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் தொடர்ந்து தரமான படங்கள் தயாரிப்பதை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Johnson

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தகுந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் `ரௌடி பிக்சர்ஸ்'. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு மாநில சினிமா விருதுகளில் இவர்கள் தயாரிப்பில் உருவான படங்களுக்கும், மேலும் நயன்தாரா நடித்த படங்களுக்கும் விருதுகள் அளிக்கப்பட்டது. இதற்கு நன்றிக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த குறிப்பில், "ரசிகர்களுக்குப் பிடித்தவகையிலும் அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் தொடர்ந்து தரமான படங்கள் தயாரிப்பதை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய  திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பது, ரசிகர்களின் மனதில் நீண்டநாட்கள் நிலைத்து நிற்கும்படியான நடிகர்களை திரையில் கொண்டுவருவது ஆகியவற்றோடு, சமூகத்தைப் பிரதிபலிக்கும் நல்ல கதைகளை திரைக்குக் கொண்டு வருவதையும் முன்னிலைப்படுத்தி ரெளடி பிக்சர்ஸ் இயங்கி வருகிறது. அந்த வகையில், இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களுக்கு தமிழ்நாடு அரசின் மாநில திரைப்பட விருதுகள் வழங்கி கெளரவித்த தமிழக முதலமைச்சருக்கும், மதிப்பிற்குரிய தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்ற ’கூழாங்கல்’ (Pebbles) திரைப்படம், கடந்த 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான விருது பெற்றது. அதே ஆண்டில் இந்த திரைப்படத்தில் நடித்த செல்லபாண்டி, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது பெற்றார். படத்தின் வலுவான உணர்வுகளையும், எந்த இடத்திலும் சமரசம் செய்து கொள்ளாமலும் இந்தக் கதையை படமாக்கிய இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ்க்கு ரௌடி பிக்சர்ஸ் பாராட்டுகள் தெரிவிக்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நெற்றிக்கண்'. பெண்கள் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு வெளியான இந்தத் திரைப்படம், சமூகத்திற்கு வலுவான கருத்துகளை எடுத்துரைத்ததற்காக சிறந்த திரைப்படத்திற்கான விருது பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய அதன் வலுவான கருத்தை திரையில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ்க்கு ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் நன்றி தெரிவிக்கிறது.

Nayanthara, Vignesh Sivan

அதேபோல், சமூக நெறிமுறை கருத்துகளை வலியுறுத்திய, 'அறம்' திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை நயன்தாராவுக்கு கடந்த 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டிருப்பதும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பெருமையான விஷயம். இப்படத்தை இயக்கிய இயக்குநர் கோபி நயினாருக்கும், படத்தைத் தயாரித்த கோடபாடி ஜே.ராஜேஷ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் ரௌடி பிக்சர்ஸ் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்தப் படங்கள் அனைத்தும் உருவாக காரணமான இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் கிரியேட்டிவ் டீம்ஸ் அனைவரின் அர்ப்பணிப்பிற்கும் ஆதரவிற்கும் ரௌடி பிக்சர்ஸ் நன்றி தெரிவிக்கிறது. சமூகப் பொறுப்புணர்வோடு கூடிய படங்களைத் தொடர்ந்து தயாரிக்கவும், புதிய திறமையாளர்களுக்கான தளமாகவும் தொடர்ந்து இயங்க, இந்த அங்கீகாரம் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது என்பதை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மகிழ்வுடன் தெரிவிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா.