ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் நடிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ள `ஆண்பாவம் பொல்லாதது' படம் அக்டோபர் 31ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டார் மிஷ்கின்.
இதில் மிஷ்கின் பேசிய போது "ஆண்பாவம் என்றதுமே எனக்கு பாண்டியராஜன் சார்தான் நினைவுக்கு வருகிறார். ஆண்பாவம் என்ற வார்த்தையே அப்போது எங்களுக்கு புதியதாக இருந்தது. அதற்கு பல வருடங்கள் கழித்து அதன் பக்கத்தில் பொல்லாதது என சேர்த்து ஒரு படமாக உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் டிரெய்லர் பார்த்த போது இயக்குநரின் தன்னம்பிக்கை தெரிந்தது.
இந்த காலகட்டத்தில் கணவன், மனைவிக்குள் நடக்கும் விஷயங்களை அழகாக பிரதிபலிக்கிறது. ரியோ ராஜை நான் டிவியில் பார்த்ததில்லை, நான் டிவியே பார்ப்பதில்லை. ஆனால் இந்தப் படத்தின் சிங்கிள் டேக்கில் வசனம் பேசும் காட்சியை பார்த்தேன். அவரிடம் நடிகராக ஒரு தன்னம்பிக்கை இருக்கிறது. எனக்குத் தெரிந்து ரியோ ராஜ் என்பதை ரியோ என வைத்துக் கொள்ளலாம். அதுதான் கேட்சியாக இருக்கிறது." என்றார்.