மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள `பைசன்' படம் நாளை (அக்டோபர் 17) வெளியாகவுள்ளது. இப்படத்திற்காக செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களில் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்
"இப்படத்திற்கு `பைசன்' என ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுள்ளதே?"
"இந்தப் படத்திற்கு பைசன் என ஆங்கில தலைப்பு வைத்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய திரைக்கதை புத்தகத்தில் தலைப்பு காளமாடன் என்றே இருந்தது. நிறைய மொழிகளுக்கு செல்லும் என்பதால், பொதுவான ஒரு தலைப்பை தயாரிப்பு தரப்பு கேட்டார்கள். நிறைய விவாதத்திற்கு பிறகு பைசன் காளமாடன் என வைத்தோம்."
"நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் உங்கள் படங்களில் சிறு தெய்வங்கள் குறித்து காட்சிகள் இடம் பெறுகின்றனவே ?"
"எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதை என்னுடைய வாழ்வியல் முறையாக மாற்றிக் கொண்டேன். இப்போது நான் உங்களுடைய காதலை பற்றி ஒரு படம் எடுக்கிறேன் என்றால், உங்களுக்கும், உங்கள் காதலிக்கும் இருந்த காதலை சொல்ல வேண்டும். எனக்கு காதல் பிடிக்காது என்பதால் அதை விட்டுவிட்டு படத்தை எடுக்க முடியாது. அது போல மனிதர்களை பற்றி பேசுவது என்றால் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கைகளும் அதில் முக்கியம். என் அப்பா பூஜை அறையில் தான் இருப்பார். அப்படி இல்லாமல் அவர் பற்றி படம் எடுத்தால், அது அவர் தான் என அவரே நம்ப மாட்டார். எல்லாவற்றுடன் சேர்த்து சொல்லும் போதுதான் கதையில் நம்பகத்தன்மை வரும்."
"உங்கள் படங்களில் ஒரே லுங்கி பயன்படுத்தப்படுகிறது என்ற மீம் வந்ததே அதை பார்த்தீர்களா?"
"அதனை நான் பார்க்கவில்லை, ஆனால் என்னிடம் சொன்னார்கள். அன்றைய காலகட்டத்தில் நானே அந்த லுங்கி கட்டிதான் அலைவேன். அந்த காலகட்டத்தை பிரதிபலிக்கும் போது, இத்தனையும் சேர்த்து சொல்ல வேண்டி இருக்கிறது. அதே போல பல கலர் லுங்கி இப்படத்தில் இருக்கிறது. ஆனால் அந்த ஒரு கலரை எடுத்து ட்ரெண்ட் ஆக்கி விட்டார்கள். அந்த காலத்தில் நம் வீடு எப்படி இருக்கும் என யோசிக்கும் போது, இந்த லுங்கியும் என் நினைவில் வந்தது. அதற்கு என தனி காரணம் எதுவும் இல்லை. ஒரே ஒரு கரணம் அந்த காலத்தில் நிறைய மனிதர்கள் அதை கட்டி இருந்தார்கள் என்பது தான்."
"நீங்கள் இன்பன் உதயநிதியின் அறிமுகப்படுத்தை இயக்குகிறீர்கள் என சொல்கிறார்களே?"
"அது அதிகாரப்பூர்வ செய்தி கிடையாது. உதயநிதி சார் எனக்கு நெருக்கமான நட்பு உள்ளதுதான். இன்பன் இப்போது படித்துக் கொண்டிருக்கிறார். ஒருவேளை இதுபற்றி அவர்கள் கேட்டால், கதை அவர்களுக்கு பிடித்தால் நடக்க வாய்ப்பிருக்கிறது. இப்போதைக்கு ரெட்ஜெயண்டில் எனக்கு ஒரு கமிட்மென்ட் இருக்கிறது. அவ்வளவுதான். அடுத்ததாக நான் தனுஷ் சார் படத்தை இயக்குகிறேன். அது பெரிய படம். அது முடியவே ஒன்றைரை வருடம் ஆகிவிடும்."
"ரஜினிகாந்த் படத்தை இயக்கவும் அவரை சந்தித்தீர்களே, அது என்ன ஆனது?"
"நிறைய முறை ரஜினிசாரை சந்தித்துள்ளேன். படங்கள் பற்றியும் கதைகள் பற்றியும் பேசி இருக்கிறோம். என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும். என் எல்லா படத்திற்கும் கால் செய்து வாழ்த்து சொல்வார். அவர் போல் ஒரு நடிகரை எப்படி இருக்குவேன் என அவருக்கு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. அதற்கான ப்ராசஸ் நடக்கிறது. ஆனால் அடுத்தடுத்து எனக்கு பணிகள் இருப்பதால் அது நகராமல் இருக்கிறது. என்ன இருந்தாலும் அதை ரஜினி சார் தான் முடிவு செய்ய வேண்டும். கதைகள் இருக்கிறது. எனக்கு இருப்பதெல்லாம் ஒன்று தான், என்னை நம்பி வர வேண்டும். அது சின்ன ஹீரோவோ, பெரிய ஹீரோவோ."
"நீங்கள் மேடைகளில், பேட்டிகளில் பேசுவது போன்று, உங்கள் படப்பிடிப்பு தளங்களில் இல்லை, மரியாதை குறைவாக நடத்துவதாக விமர்சனங்கள் உள்ளதே?"
"என்னுடன் தொடர்ந்து பணியாற்றும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தான் அதை சொல்ல வேண்டும். என் வீட்டுக்கு வெளியில் இருந்து, நான் என் அம்மா அப்பாவுடன் பேசுவதை கேட்டுவிட்டு சண்டை போடுகிறேன் என நீங்கள் நினைக்கலாம். உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என எங்களுக்கே தெரியும். இதை பேசும் யாருமே, மாறி செல்வராஜ் ஏன் இவ்வளவு ஓடுகிறான், இவ்வளவு வேலை செய்கிறான், இயக்குநராக சேரில் உட்கார வேண்டியதுதானே என பேச மாட்டார்கள். என்னால் செய்ய முடியாத ஒன்றை நான் பிறரை செய்ய சொல்ல மாட்டேன். நான் செய்து காண்பித்துதான் செய்ய சொல்வேன். என்னிடம் நெருக்கமான ஆட்களிடம் தான் நான் பேசியே இருப்பேன்."