நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள `வா வாத்தியார்' டிசம்பர் 12ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசிய போது, "என்னுடைய சினிமா பயணத்தில் நான் மிகவும் ரசிக்கும் நாட்கள் என்றால் நலன் மற்றும் ஸ்ரீனிவாஸ் கவிநயம் இருவரையும் சந்தித்தது. சூதுகவ்வும் படத்தின் போது நலனை சந்தித்து பேசிய போது பயங்கரமாக சிரித்து, அவரது வாழ்க்கை முறை பேசும் விதம் எல்லாவற்றையும் ஆச்சர்யமாக பார்த்தேன். இந்திய சினிமாவில் ஒரு அபூர்வம் உருவாகிறது என அப்போதே உணர்ந்தேன்.
வா வாத்தியார் படத்தில் நான் பணியாற்ற வேண்டும் என நானே நலனுக்கு போன் செய்து வாய்ப்பு கேட்டேன். அவரிடம் நான் அப்படி கேட்டது அதுதான் முதல் முறை. இந்தப் படத்தின் பாகமாக இருப்பதில் மகிழ்ச்சி. நிஜ வாழ்க்கையில் ஒரு சூப்பர் ஹீரோ என வரலாற்றில் யோசித்தால் எம் ஜி ஆர் தான் நினைவுக்கு வருவார். இந்தப் படத்தின் மூலமாக அவருடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள், அவர் கடந்து வந்த பிரச்சனைகளை எல்லாம் கேட்ட போது பிரமிப்பாக இருந்தது. ஒரு இசையமைப்பாளராக இந்தப் படத்தை ஒரு சூப்பர் ஹீரோ படம் போல தான் பார்த்தேன்.
கார்த்தி சார் உங்களுடன் பணியாற்றி பெரிய இடைவெளி ஆகிவிட்டது. பல வருடங்களுக்கு பிறகும் நீங்கள் அப்படியே என்னிடம் பழகினீர்கள். மெட்ராஸ் படத்தின் போது நாங்கள் சுயாதீன வகையில் புதிதாக ஒன்றை உருவாக்க நினைத்தோம். அதை புரிந்து கொண்டு ஆதரவு கொடுத்தார் கார்த்தி சார். இந்தக் கதையை கேட்ட போது கமர்ஷியல் சினிமாவுக்கு ஒரு புதிய வாசலை திறந்து விடும் என தோன்றியது. அப்படி நடந்தது என்றால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
ஒரு இசையமைப்பாளராக நான் என் குருவாக நினைப்பது எம் எஸ் வி அவர்களை, அவரின் இசை இந்தப் படத்தின் உயிர்நாடி போல இருக்கிறது. அதை அடிப்படையாக வைத்து புதிதான இசையை உருவாக்க வாய்ப்பு கிடைத்தற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்" என்றார்.