தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய். ஜனநாயகனுடன் தன் திரைப்பயணத்தை நிறுத்துவதாக அறிவித்ததில் ரசிகர்கள் பலரும் அதிருப்தியில் தான் இருக்கிறார்கள். அதே சமயம் அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் எப்போதும் குறைந்ததில்லை. தமிழில் மட்டுமல்லாது பிற மொழி ரசிகர்களும் கொண்டாடும் நட்சத்திரமாக இருப்பவர் விஜய். அதிலும் குறிப்பாக கேரளாவில் அந்த ஊர் ஹீரோக்களுக்கு இணையான மாஸ் விஜய்க்கு உண்டு. அதை இப்போது நிரூபிக்கும் வகையில் ஒரு மலையாள சினிமாவில் விஜய் ரெஃபரன்ஸ் வைக்கப்பட்டிருக்கிறது.
திலீப் நடித்து தனஞ்ஜெய் ஷங்கர் இயக்கிய படம் `Bha. Bha. Ba'. இதில் வினீத் ஸ்ரீனிவாசன், தியான் ஸ்ரீனிவாசன், பாலு வர்கீஸ், சரண்யா பொன்வண்ணன் எனப் பலரும் நடித்துள்ளனர். இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதில் நடிகர் விஜயின் பல ரெஃபரன்ஸ் வைக்கப்பட்டுள்ளது பேசு பொருளாகியுள்ளது. இப்படத்தில் பயன்படுத்தியுள்ள காரின் பதிவு எண் TN-59-100. இது கில்லியில் விஜய் ஓட்டிய ஜீப்பின் பதிவு எண். பின்பு அர்ஜுனரு வில்லு பாடலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாம். மேலும் இப்படத்தில் மோகன்லாலும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அவரது பாத்திர பெயர் கில்லி பாலா. பின்பு படத்தில் வரும் ஒரு காலனியின் பெயர் `தளபதி காலனி' என பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இதே போல மோகன்லால் ஒரு காட்சியில், அவர் தரும் ஒரு போஸ், மெர்சல் படத்தில் விஜய் செய்தது போலவே இருக்கிறது. மோகன்லால் விஜயின் ரெஃபரன்ஸ் வைத்துள்ளார் என இணையத்தில் பரவி வருகிறது. ஏற்கெனவே விஜய், மோகன்லால் நடித்த `ஜில்லா' படத்தின் ஒரு காட்சியில் மோகன்லால் போலவே இமிடேட் செய்து நடப்பார் விஜய். இப்போது அதற்கு சமன் செய்யும்படியாக மோகன்லாலும் விஜய் போல செய்கிறார் என சொல்லப்படுகிறது. அதே வேளையில் இது விஜய் ஸ்டைல் இல்லை, `ராவணப்பிரபு' படத்தில் மோகன்லால் செய்தது தான் எனவும் சிலர் சொல்கின்றனர். எது எப்படியோ `Bha. Bha. Ba' படத்தில் நிறைய கில்லி ரெஃபரன்ஸ் வைத்துள்ளனர் என்பது மட்டும் உண்மை.