பா.ரஞ்சித்-உதயநிதி ஸ்டாலின்
பா.ரஞ்சித்-உதயநிதி ஸ்டாலின் Twitter, PT Desk
கோலிவுட் செய்திகள்

‘தவறு எங்கு நடந்தாலும் தவறு தான்’ - பா.ரஞ்சித் விமர்சனத்திற்கு அமைச்சர் உதயநிதி மீண்டும் விளக்கம்!

சங்கீதா

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கல்வி ஊக்கத் தொகை வழங்கினார். தொடர்ந்து, அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினார்.

ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நேரு, சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஸ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “மாணவர்கள் இதனை ஊக்கத் தொகை என நினைக்க வேண்டாம், உரிமைத் தொகை ஆகும். உங்களிடம் இருந்து கல்வியை மட்டும் யாராலும் பறித்துவிட முடியாது. எனவே, நன்றாகப் படித்து மாணவர்கள் பல சாதனைகள் புரிய வேண்டும். தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுகவில் சாதி பாகுபாடு இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் கூறியது பற்றி கேள்வி பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ரஞ்சித் முன்வைத்த விமர்சனத்திற்கு விளக்கம் அளித்திருக்கிறேன். யாராக இருந்தாலும் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்‌. தவறு எங்கு நடந்தாலும் அது தவறு தான், அந்த தவறை திருத்திக் கொள்ளும் வகையில் தான் பெரியார், அண்ணா, கலைஞர் என எங்கள் தலைவர்கள் எங்களை வளர்த்திருக்கிறார்கள்” என்றார். மேலும் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் குத்துச்சண்டை அகாடமி திறக்கப்படவுள்ளது எனவும், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.