Urvashi Parimala & Co
கோலிவுட் செய்திகள்

"மலையாள சினிமாவைவிட விரைவாக படம் எடுத்தார் பாண்டிராஜ்!" - ஊர்வசி | Urvashi | Parimala & Co

நாங்கள் இருவரும் இணைந்து படம் செய்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. ’பஞ்சதந்திரம்’ படத்துக்குப் பின் புத்தம்புது காலையில் ஒருநாள் மட்டும் பணியாற்றும் வாய்ப்பு அமைந்தது.

Johnson

பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகிபாபு, அனந்திதா, சஞ்சனா எனப் பலரும் நடித்துள்ள படம் `பரிமளா & கோ'. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய நடிகை ஊர்வசி "என்னைப் பொறுத்தவரை கதையே ஹீரோவாக அமைவது அரிதானது. அவ்வப்போதுதான் அந்த மாதிரி அமையும். இந்த முழுக் கதையும் கேட்டு, ஜெயராம்தான் இதில் நடிக்கிறார் என தெரிந்தபின்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் இருவரும் இணைந்து படம் செய்து 20 வருடங்கள் ஆகிவிட்டன.

’பஞ்சதந்திரம்’ படத்துக்குப் பின் புத்தம்புது காலையில் ஒருநாள் மட்டும் பணியாற்றும் வாய்ப்பு அமைந்தது. அதன்பின்னர், பல கதைகள் வந்தாலும், சரியான கதை அமையவே இல்லை. பாண்டிராஜின் பலமே அவரது எழுத்துதான். ’பசங்க’ படத்திலிருந்து அவரின் எல்லாப் படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். கதையில் அவர் மிகவும் மெனக்கெடுவார். சாதாரணமாக மலையாளத்தில் குறைந்த நாட்கள்தான் படப்பிடிப்பு நடக்கும் எனச் சொல்வார்கள். இப்போதும் 45 நாட்களில் முடிக்கிறார்கள். ஆனால், பாண்டிராஜ் இந்தப் படத்தை மலையாள சினிமாவைவிட விரைவாக எடுத்தார். நான் மலையாளத்தில் படங்கள் நடித்துக் கொண்டிருந்ததால், அங்கிருந்து இங்கு வந்துபோக வேண்டி இருந்தது. அதனால் சில தடைகள் ஏற்பட்டிருக்கலாம். அதையும் சமாளித்து இங்கு நான் வந்திருக்கிறேன். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பும் அவ்வளவு ரசிக்கும்படி இருந்தது" என்றார்.