தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள படம் `கர'. மமிதா பைஜூ, ஜெயராம், கருணாஸ், கே எஸ் ரவிக்குமார், ப்ரித்வி பாண்டியராஜன் எனப் பலரும் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பாக பேட்டி அளித்த கே எஸ் ரவிக்குமார், தனுஷ் இயக்கத்தில் துவங்கிய படம் பற்றிய தகவலை பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "தனுஷ் சார் வைத்து ஒரு படம் பூஜை எல்லாம் போட்டோம். கமல் சார் தான் அந்த பூஜையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினார். படத்தின் பெயர் `ஓடிப் போலாமா?'. நானும் கஸ்தூரி ராஜாவும் பிரமிட் நடராஜன் சாருக்கு ஒரே சமயத்தில் படம் செய்தோம். அவர் `என் ஆசை ராசாவே' படம் செய்தார், நான் `பிஸ்தா' செய்தேன்.
`பிஸ்தா', மற்றும் `என் ஆசை ராசாவே' ஆகிய இரு படங்களின் வெற்றி விழாவும் ஒன்றாக நடைபெற்றது. அதற்கு அப்போதைய சென்னை மேயராக இருந்த ஸ்டாலின் சார் கலந்து கொண்டார். எனவே அந்த கம்பெனியில் இருந்து இப்போது விஜய் நடிப்பில் ஒரு படம் செய்கிறோம். அந்தப் பட ரிலீசுக்கு முன்பு ஒரு படம் ஆரம்பிக்க வேண்டும் என என்னை இயக்க கேட்டார்கள். அப்போது தனுஷ் பயங்கர பிஸி. தனுஷ் தேதிகளை அப்போது கஸ்தூரி ராஜா தான் பார்த்துக் கொண்டிருந்தார். தனுஷ் நடிக்க சம்மதித்ததும், அவரை வைத்து போட்டோஷூட் எல்லாம் செய்தோம். அந்தப் படத்துக்கு போட்டோ எல்லாம் வைத்து ஒரு புக் கூட தயார் செய்தோம்.
ரமேஷ் கண்ணா தான் அந்தப் படத்துக்கு கதை. ஆனால் விஜய் சாரின் படம் வெளியான பின்னர் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு பண நெருக்கடி வந்தது. எனவே இந்தப் படைத்தை அவர்களால் எடுக்க முடியவில்லை. ஆனால் அந்தப் படத்தின் கதை மிக சுவாரஸ்யமானது. படத்தில் ஹீரோ ஓடிக் கொண்டே இருப்பான். ஏதாவது குற்றம் நடக்கும், அதை இவன் செய்திருக்க மாட்டான். ஆனால் இவன் தான் செய்தான் என தவறாக புரிந்து கொள்ளப்படும், அதிலிருந்து தப்பிக்க ஓடுவான். அதனால் தான் படத்தின் பெயரே ஓடி போலாமா" என்றார்.