மலையாள திரையுலகில் மிகப்பிரபலமான நடிகை மமிதா பைஜூ. தற்போது இவர் கோலிவுட்டிலும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் பிரதீப்புடன் நடித்துள்ள `ட்யூட்' நாளை (அக்டோபர் 17) வெளியாகவுள்ளது. இப்படம் தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், விஜயுடன் `ஜனநாயகன்', சூர்யாவுடன் `சூர்யா 46' படங்களில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
அப்பேட்டியில் மமிதா பைஜூ " `பிரேமலு' படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில், விஜய் சார் இனி நடிக்கப் போவதில்லை, கடைசியாக ஒரு படம் தான் நடிக்கப் போகிறார் என்ற செய்தி வந்திருந்தது. அதைப் பற்றி எதேர்சையாக ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. என்னால் சாருடன் நடிக்க முடியாது, இதுவரை ஒரு நம்பிக்கையாவது இருந்தது எனக் கூறினேன். அதன் பின் இப்பட (ஜனநாயகன்) வாய்ப்பு கிடைத்த போது, என்ன சொல்வதென்றே தெரியாத நிலையில் இருந்தேன். இவர்களை பார்த்துதானே வளர்ந்தோம், சினிமாவை விரும்பினோம். இதை ஒரு ஆசீர்வாதமாக பார்த்தேன். விஜய் சாருடன் நடிப்பதும், திரையில் தோன்றுவதும் என்னுடைய திரை பயணத்தில் பெரிய சாதனையாக நினைக்கிறேன்.
சூர்யா சாருடன் நடிப்பதும் அது போன்ற ஒன்றுதான். `வணங்கான்' படத்தில் சூர்யா சாருடன் நடிக்க வேண்டியது. அப்படத்திற்காக 9 மாதங்கள் காத்திருந்தேன். ஆனால் அது மிஸ்ஸானது. அந்த நேரத்தில் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். எல்லாம் என் கைகளில் இருந்து நழுவிப் போனது போல் உணர்ந்தேன். ஆனால், மீண்டும் சூர்யா சார் படத்தில் (சூர்யா 46) பணியாற்றும் வாய்ப்பும், முக்கியமான ரோலும் கிடைத்தது பெரிய விஷயம். அந்த பாத்திரத்திற்கு அவர்கள் என்னை யோசித்து பார்த்தார்கள் என்பது கற்பனை கூட செய்து பார்க்காத ஒன்று. என்னுடைய பயணத்தில் இது நான் யோசித்து கூட பார்க்காத மிகப்பெரிய வளர்ச்சி எனப் இதை பார்க்கிறேன்." எனக் கூறியுள்ளார். இப்படங்கள் தவிர `தனுஷ் 54', விஷ்ணு விஷால் நடிக்கும் `இரண்டு வானம்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் மமிதா.