மத கஜ ராஜா X Page
கோலிவுட் செய்திகள்

பொங்கல் 2025 ரேஸில் விஷால் - சுந்தர்.சி-யின் ‘மத கஜ ராஜா’... 12 வருடங்கள் தள்ளிப்போனது ஏன்?

10 வருடங்களுக்கு மேலாக கிடப்பில் இருந்த `மத கஜ ராஜா'வும் "நாங்களும் போட்டிக்கு வரலாமா?" என, ஜனவரி 12 ரிலீஸ் ஆக களம் இறங்கியுள்ளது. உண்மையில் `மத கஜ ராஜா'வின் இத்தனை வருட டிலேவுக்கு என்ன காரணம்? பார்க்கலாம்...

Johnson

பொங்கல் ரிலீஸில் இருந்து அஜித்தின் `விடாமுயற்சி' என்ற ஒரேயொரு படம் தான் விலகியது. கேயாஸ் தியரி போல, அதன் விளைவாக பல படங்கள் பொங்கல் ரிலீசுக்கு துண்டு போட ஆரம்பித்தன. இதெல்லாம் ஒரு சம்பவம் என்றால், ஒரு சரித்திரமும் நடந்திருக்கிறது. 10 வருடங்களுக்கு மேலாக கிடப்பில் இருந்த `மத கஜ ராஜா'வும் "நாங்களும் போட்டிக்கு வரலாமா?" என, ஜனவரி 12 ரிலீஸ் ஆக களம் இறங்கியுள்ளது. உண்மையில் `மத கஜ ராஜா'வின் இத்தனை வருட டிலேவுக்கு என்ன காரணம்? பார்க்கலாம்...

மத கஜ ராஜா

`சமர்' படத்தை முடித்த உடன் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படம் நடிக்கப் போவதாகவும் அதன் பெயர் எம்.ஜி.ஆர் என்றும் 2012ல் அறிவித்தார் விஷால். மேலும் படத்தின் பெயருக்கும், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்து, அப்போதைய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஹீரோயின் யார்? மூன்று விஷாலா ஒரு விஷாலா? என சில குழப்பங்கள் இருந்ததாக சொல்லப்பட்டாலும், ஒரு பாடல் ஷூட்டிங்குடன் படப்பிடிப்பு துவங்கியது. பழனி, ஜெய்பூர், ஹைதராபாத் என பரபரப்பாக எடுத்து ஷூட்டிங்கை முடித்தார் சுந்தர் சி. விஷால் முதல் முதலாக பாடிய பாடல், எயிட் பேக்ஸ் வைத்த விஷால், ஆர்யா கெஸ்ட் ரோல் என சில ஸ்பெஷல் முயற்சிகளையும் படத்தில் சேர்த்திருந்தினர். நவம்பரில் படத்தின் புரமோஷனை ஆரம்பித்து, படத்தை 2013 பொங்கலுக்கு கொண்டு வர திட்டமிட்டது தயாரிப்பு நிறுவனமான ஜெமினி பிலிம் சர்க்யூட்.

ஆனால் விஷால் அதற்கு முன் நடித்த `சமர்' படம், 2012ல் சில முறை தள்ளி தள்ளி வைக்கப்பட்டு 2013 பொங்கலை நோக்கி நகர்ந்தது. எனவே தன் இரு படங்கள் ஒரே நாளில் மோதுவதை விரும்பாத விஷால், `மத கஜ ராஜா'வை ஹோல்டில் வைக்கும்படி பார்த்துக் கொண்டார்.

ஜனவரி இறுதியில் படத்தை கொண்டு வந்துவிட நினைத்தார்கள், ஆனால் `சமர்' படத்தின் வெற்றி, அதற்கு தற்காலிக தடையாக இருந்தது. இதே நேரத்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட்க்கு கழுத்தில் கத்தி வைத்தது முந்தைய படங்களில் ஏற்பட்ட கடன். குறிப்பாக கடல் படத்தை பெரிய தொகைக்கு வாங்கி விநியோகித்ததில் பலத்த அடி என அப்போது கூறப்பட்டது. எனவே, `மத கஜ ராஜா'வை வெளியிட வேண்டும் என்றால், இந்த கடனை எல்லாம் அடைக்க வேண்டும் என்ற சுமை வந்து நின்றது.

மத கஜ ராஜா

இதன் பின்னும் படத்தை வெளியே கொண்டு வர பல முயற்சிகள் நடந்தாலும் எதுவும் கை கொடுக்கவில்லை. படத்தின் ஹீரோ விஷால் கூட படத்தை வாங்க முயற்சிகள் செய்தார். ஆனால் அதுவும் நடைமுறைக்கு ஒத்து வராததால், கைவிடப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் விஷால் பல படங்களில் நடித்தார், ஹிட் படங்களும் கொடுத்தார், சுந்தர் சி நடிகராக செகண்ட் இன்னிங்ஸ் துவங்கி, இயக்குநராக பல ஹிட் கொடுத்து `அரண்மனை', `கலகலப்பு' என்ற இரு movie franchises உருவாகிவிட்டார். இவ்வளவு ஏன் விஷால் - சுந்தர் சி கூட்டணியிலேயே கூட `ஆம்பள', `ஆக்ஷன்' என இரு படங்கள் வெளியானது.

ஆனால் யாருமே எதிர்பார்க்காத படி இப்போது படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் நடித்த சந்தானம், சுந்தர் சி மனைவி குஷ்பூ ஆகியோர் தங்களது எக்ஸ் தளங்களில் இதனை அறிவித்துள்ளனர். இதன் பின்னால் என்ன நடந்தது, எப்படி பிரச்னைகள் எல்லாம் முடிந்தது, 13 ஆண்டுகால போராட்டம் சாத்தியமானது எப்படி? எனப் பல கேள்விகள் உள்ளன. ஆனாலும் கிடப்பில் போடப்பட்ட படம் வெளியீட்டை பார்ப்பது எல்லாம் அபூர்வமாக நிகழும் ஒன்று. எனவே இந்த வெளியீட்டு தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு.