சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பு `வீரபத்ருடு' பட Pre-Release நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய சூர்யா, "ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். ஹைதராபாத் வரும் போதெல்லாம் தூய்மையான அன்பைப் பார்க்கிறேன். 28 வருடங்களாக அது மாறவே இல்லை. இதற்கெல்லாம் நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். எனக்கு தெலுங்கு அவ்வளவு நன்றாக தெரியாமல் இருக்கலாம், ஆனால் தெலுங்கு மக்களின் மனது தெரியும்.
ஆர்.ஜே.பாலாஜியின் இந்தப் பயணத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. என்னால் இந்த வாழ்க்கையில் ஒரு வேலையைத்தான் செய்ய முடியும். ஆனால் அவருக்கு பல திறமைகள் உண்டு. ஆர்.ஜே. முதல் இயக்குநர் வரை பல வேலைகளைச் செய்திருக்கிறார். அவர் ஒரு நல்ல நண்பர், நல்ல தந்தை, நல்ல தலைவரும்கூட. அவருடன் நேரம் செலவிடுவது எனக்குப் பிடிக்கும். சிரிப்போ, எமோஷனோ அதனை மிகச் சரியாக வாங்குவார். இப்படத்தின் கதையை 40 நிமிடங்கள் மட்டுமே கேட்டுவிட்டு உடனே சம்மதித்தேன். கதை கேட்டபோது எங்கள் அறையில் கருப்பசாமியும் இருந்தார் என அடிக்கடி சொல்வேன். எங்கெல்லாம் நம்பிக்கை இருக்கிறதோ, அங்கெல்லாம் மேஜிக் நடக்கும்.
அவர் அதை நம்பினார். நானும் கடவுள் நம்பிக்கை உள்ள நபர்தான். ஆனால் எனக்குப் பிரச்னை வந்தால்தான், கடவுளை நோக்கிச் செல்வேன். ஆனால் ஆர்.ஜே.பாலாஜி செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் கடவுளின் கரமும் இருக்கும். அதனால்தான் இந்தக் கதையை மிக நேர்த்தியாக இவர் கொடுத்திருக்கிறார். படத்தின் முதல் பாதி நல்ல கோர்ட் ரூம் ட்ராமாவாக இருக்கும், இரண்டாம் பாதி மாஸ் ஆக இருக்கும். அந்த ஓர் உறுதியை நான் இப்போது கொடுக்கிறேன்" என்றார்.