Bharath Mr Bharath
கோலிவுட் செய்திகள்

லோகேஷ் கனகராஜ் சொன்ன தலைப்புதான் `மிஸ்டர் பாரத்' | Mr Bharath

பாரத் தனது நண்பரும் மற்றும் இயக்குநருமான நிரஞ்சன் இயக்கத்தில் `மிஸ்டர் பாரத்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

Johnson

யூடியூப் உலகிலிருந்து வெள்ளித்திரைக்கு வரும் நடிகர் பட்டியலில் புதிய அறிமுகம் பாரத். இவர் தனது நண்பரும் மற்றும் இயக்குநருமான நிரஞ்சன் இயக்கத்தில் `மிஸ்டர் பாரத்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர். சுந்தர்ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ளார். யூட்யூபில் தனது தனித்துவமான நகைச்சுவையில் பாரத் தனக்கென அடையாளத்தை உருவாக்கியுள்ளார். எனவே, அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.

Mr Bharath

இப்படம் குறித்து இயக்குநர் நிரஞ்சன் கூறுகையில், "ஒரு திரைப்படத்தின் முதல் அடையாளம், அதன் டைட்டில்தான். 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்திற்கு முதலில் 'மாஸ்டர் பீஸ்' என்ற தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால், அதே தலைப்பில் கன்னடம் மற்றும் தெலுங்கில் திரைப்படங்கள் இருந்ததால் மாற்று தலைப்பாக ‘மிஸ்டர் பாரத்‘ தேர்வு செய்தனர். இந்த தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான் பரிந்துரைத்தார். அந்த தலைப்பு படக்குழுவினருக்கும் மிகவும் பிடித்துவிட்டது. இருப்பினும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மிகப்பெரிய வெற்றிப் படமான 'மிஸ்டர் பாரத்' என்ற தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதில் பொறுப்பும் இருந்தது. அதற்காக ஏ.வி.எம். ஸ்டூடியோஸ் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ என்.ஓ.சி (No Objection Certificate) பெற்ற பிறகு, படத்திற்கு 'மிஸ்டர் பாரத்' என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டது." என்றார்.

இதுகுறித்து நடிகர் பாரத் பகிர்ந்துகொண்டதாவது, "இதற்கு முன்பு 'பிரின்ஸ்', 'லவ் டுடே' போன்ற படங்களில் கதாநாயகனின் நண்பராக நடித்துள்ளேன். தற்போது முதல் முறையாக கதாநாயகனாக நடிப்பது எனக்கு கனவு நனவான தருணம். அதிலும் புதியவர்கள் நாங்கள் ஆறு பேரும் ஒரே படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகிறோம் என்பது இன்னும் மகிழ்ச்சியான விஷயம். எங்களுக்கு ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தேவை.

Bharath

இயக்குநர் நிரஞ்சன் எழுதி இயக்கியுள்ள 'மிஸ்டர் பாரத்' திரைப்படம் நகைச்சுவை, காதல், உணர்வுகள் மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக்கியுள்ளார். பிரம்மாண்ட காட்சிகளுக்குப் பதிலாக, மனதில் நிற்கும் கதாபாத்திரங்களையும், உணர்வுபூர்வமான திரைக்கதையையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.