Mamitha Baiju Jana Nayagan
கோலிவுட் செய்திகள்

"சினிமாவையும், அதற்குப் பின்னால் உள்ளவர்களையும் பாதுகாக்க.." - மமிதா பைஜூ | Mamitha | Jana Nayagan

ஒவ்வொரு நாளும் தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்கும் பலரின் கடின உழைப்பு, பேரார்வம் மற்றும் அர்ப்பணிப்பின் மூலமே ஒரு திரைப்படம் உயிர் பெறுகிறது.

Johnson

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம், ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது. இப்படத்துக்கு CBFC சான்றிதழ் வழங்குவதில் சிக்கல்கள் காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் இப்படத்தின் சில காட்சிகள் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது. மேலும், சில மணிநேரங்களில் முழுப்படமும் வெளியானது.

இது குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வந்தனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட திரைத்துறையினர் பலரும் இதற்கு எதிராக தங்கள் குரலை பதிவு செய்தனர். இப்படத்தில் நடித்த பூஜா ஹெக்டேவை தொடர்ந்து இப்போது மமிதா பைஜூவும் பதிவிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள அவர் பதிவில்,  "அன்பான பார்வையாளர்களே, ஒவ்வொரு நாளும் தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்கும் பலரின் கடின உழைப்பு, பேரார்வம் மற்றும் அர்ப்பணிப்பின் மூலமே ஒரு திரைப்படம் உயிர் பெறுகிறது. அது சட்டவிரோதமாகப் பரப்பப்படுவதைக் காண்பது உண்மையிலேயே ஏமாற்றமளிக்கிறது. சில தருணங்கள், அவை உருவாக்கப்பட்ட நோக்கத்தின்படியே, பெரிய திரையில் கூட்டமாக கண்டு ரசிக்கப்பட வேண்டியவை. அது அதிகாரப்பூர்வமாக வெளியாகும்வரை காத்திருந்து, சரியான முறையில் அதைக் கண்டு மகிழ்வோம். தயவுசெய்து திருட்டுத்தனத்தை ஆதரிக்காதீர்கள். அதன்மூலமே நாம் சினிமாவையும், அதற்குப் பின்னால் உள்ள அனைவரையும் பாதுகாக்க முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார் மமிதா பைஜூ.