தமிழ் சினிமாவில் `மைனா', `கும்கி' படங்கள் மூலம் கவனிக்கப்பட்ட பிரபுசாலமன், இப்போது கும்கி 2 படத்தை உருவாக்கி இருக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.
முன்பு பல படங்களை இயக்கி இருந்தாலும் `மைனா', `கும்கி' படங்கள் மூலம் பலரும் கவனிக்கும் இயக்குநராக மாறினார் பிரபுசாலமன். விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் ஆகியோர் நடிப்பில் உருவான `கும்கி' வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கும்கி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. "இந்தப் படம் ஒரு சிறுவனுக்கும், யானைக் கன்றுக்கும் இடையிலான நிபந்தனையற்ற பிணைப்பைச் சுற்றியதாக அமைந்துள்ளது. அவர்கள் எப்படி சந்திக்கிறார்கள், அவர்களின் பயணம் எவ்வாறு விரிவடைகிறது, அவர்களின் நட்பு என்ன சோதனைகளுக்கு ஆளாகிறது என்பதெல்லாம் தான் படத்தின் மையம்." என ஒரு பேட்டியில் கூறியிருந்தார் பிரபுசாலமன். இப்படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
மதி என்ற புதுமுகம் முதன்மை பாத்திரத்தில் நடித்து, இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அர்ஜூன் தாஸ் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். நவம்பர் 14ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.