Kollywood round up
Kollywood round up File image
கோலிவுட் செய்திகள்

கார்த்தியின் ‘ஜப்பான்’ ரிலீஸ் முதல் ‘இந்தியன் 2’ ரஷ் வரை... கோலிவுட் லேட்டஸ் நியூஸ்!

சங்கீதா

கிறிஸ்துமஸ்-க்கு தள்ளிப்போன கேப்டன் மில்லர்!

தனுஷ்-அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் தயாராகி வரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் முதலில் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்ட நிலையில், படப்பிடிப்புகள் இன்னும் நிறைவடையாததால், வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரமிற்காக காத்திருக்கும் ‘தங்கலான்’ படக்குழு!

விக்ரம்- பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படமும், செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒத்திகையின்போது ஏற்பட்ட விபத்தில், விலா எலும்பு முறிந்ததை அடுத்து, அவர் முழுமையாக குணமடைவதற்காக படக்குழு காத்துள்ளது. அதன்பிறகே மீதி படப்பிடிப்பு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக இஷா கோபிகர்?

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு முக்கிய வில்லியாக இஷா கோபிகர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன் மாதத்தில் ‘விடாமுயற்சி’ ஷுட்டிங்!

மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் அஜித்தின் 62-வது படமாக தயாராக உள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் படம் வரும் 2024-ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.

‘இந்தியன் 2’ படத்தின் ரஷ் காட்சிகளை பார்த்த கமல்!

ஷங்கர் இயக்கத்தில், ரெட் ஜெயண்ட் மற்றும் லைகா இணைந்து தயாரித்து வரும் ‘இந்தியன் 2’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்திற்கான டப்பிங் பணிகளை சமீபத்தில் கமல்ஹாசன் மேற்கொண்ட நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குநர் ஷங்கர் இசைப் பணிகளை மேற்கொண்ட காட்சிகள் நேற்று வெளியாகின. இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்தின் ரஷ் காட்சிகளை பார்த்த கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கரை மனமார பாராட்டியதாக கூறப்படுகிறது. மிகவும் அற்புதமான காட்சிகளுடன் படம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தப் படத்துக்காக சிம்பு தீவிரப் பயிற்சி!

நடிகர் சிலம்பரசன் ‘பத்து தல’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்ததாக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ள இந்தப் படத்திற்காக தாய்லாந்தில் வாள் சண்டை பயிற்சி மேற்கொண்ட நிலையில், அடுத்ததாக லண்டனில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் சிம்பு. பீரியட் ஆக்ஷன் பேண்டஸி படமாக தயாராக உள்ள இந்தப் படம் தனது சினிமா கேரியரை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும் என நம்புவதால், வேறு எந்தப் படங்களிலும் சிம்பு கமிட் ஆகவில்லை என்று சொல்லப்படுகிறது.

தனுஷின் 50வது படத்தில் குவியும் நட்சத்திர பட்டாளம்!

தனுஷின் 50-வது படத்தை அவரே இயக்கி, நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில், தனுஷுக்கு அண்ணன், தம்பி கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளதாகவும், அத்துடன் விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே, ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷூடன் இணைந்து சந்தீப் கிஷன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், தனுஷ், கமல் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.

கார்த்தியின் ‘ஜப்பான்’ ரிலீஸ் எப்போது?

கார்த்தி-ராஜூமுருகன் கூட்டணியில் தயாராகியுள்ள ‘ஜப்பான்’ திரைப்படம், வரும் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளதாக டீசருடன், கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளளது.

ஏற்கெனவே தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் ‘அயலான்’, கார்த்திக் சுப்புராஜ்-ன் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் தீபாவளி ரிலீஸ் போட்டியில் உள்ள நிலையில், இதனுடன் ‘ஜப்பான்’ படமும் இணைந்துள்ளது.

விஷாலின் அடுத்தப் பட ஷுட்டிங் அப்டேட்!

ஹரி இயக்கத்தில், விஷாலின் 34-வது படமாக தயாராகவுள்ள புதியப் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் முதல் வாரத்தில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘லியோ’ படத்தில் மிஷ்கின் கதாபாத்திரம் என்ன?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தில் இயக்குநர் மிஷ்கின் சிறிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அவரே அண்மையில் மேடை ஒன்றில் தெரிவித்துள்ளார்.