Dulquer Salmaan
Dulquer Salmaan king of kotha
கோலிவுட் செய்திகள்

King of Kotha Review | புதுசா இல்லாட்டியும் பரவாயில்லை... டக்குன்னு முடிச்சிருக்கலாம்ல..!

Johnson

ஒரு கேங்க்ஸ்டரை ஒழிக்க, இன்னொரு கேங்க்ஸ்டரை அழைத்து வந்தால், அதுவே `கிங் ஆஃப் கொத்தா’

படத்தின் கதை 96ல் துவங்குகிறது. கொத்தாவுக்கு புதிய சர்கிள் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்கிறார் ஷாஹூல் (பிரசன்னா). ஊருக்குள் பெரிய கேங்க்ஸ்டரான கண்ணன் (ஷபீர்) பல அட்டூழியங்களை செய்வது பார்த்து கோபமாகிறார் ஷாஹூல். ஆனால் கண்ணன் மிக பவர்ஃபுல்லான ஆள் என்பதால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போதுதான் ராஜூ (துல்கர் சல்மான்) பற்றி தெரியவருகிறது. ஊரே கண்ணனைப் பார்த்து பயந்தால், கண்ணனே பார்த்து பயப்படும் ஒரு நபர் ராஜூ. எனவே கண்ணனை அழிக்க, ராஜூவை திரும்ப கொத்தா அழைத்து வர முயல்கிறார் ஷாஹூல். ராஜூ யார்? கண்ணனுக்கும் ராஜூவுக்குமான பின் கதை என்ன? ராஜூ திரும்பி வந்த பின் என்ன ஆகிறது என்பதெல்லாம் தான் படத்தின் மீதிக்கதை.

படத்தின் பாசிடிவான விஷயங்கள் என எடுத்துக் கொண்டால், அபிலாஷ் என் சந்திரனின் கதை, அதில் அவர் செய்திருக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லலாம். இது ஒரு கேங்க்ஸ்டர் ட்ராமாவாக இருந்தாலும், ஒருவன் தான் மிகவும் நேசித்த இருவரின் துரோகத்தால் எப்படி வீழ்கிறான் என்பதை முதன்மைப்படுத்தியிருந்தார். இன்னொன்று, இந்தக் படத்தின் பிரதான பாத்திரங்கள் எல்லாம் ஆண்கள் தான் என்றாலும், கதையின் திருப்பங்களுக்கு காரணமாக இருப்பவர்கள் பெண்கள் தான்.

Ritika Singh

உதாரணமாக, ராஜூ பல குற்றங்கள் செய்தாலும், போதை வஸ்துக்களை மட்டும் கொத்தாவுக்குள் அனுமதிப்பதில்லை. ஏனென்றால் அவரது காதலியின் தம்பி போதைப் பொருள் பாதிப்பால் இறந்து போயிருப்பான். எனவே கொத்தாவின் போதை சாம்ராஜ்யத்தை கைப்பற்ற இன்னொரு கேங்க்ஸ்டரான ரஞ்சித் (செம்பன் வினோத்) வருவார். எனவே ராஜூவுக்கும் - இன்னொரு கேங்க்ஸ்டருக்குமான உரசலை துவங்கி வைப்பது ஒரு பெண்.

கொத்தாவை விட்டு ராஜூ போவதற்கு காரணம் அவரது தங்கை. அதே தங்கையால் தான் அவர் மீண்டும் கொத்தாவுக்கு திரும்பவும் வருவார். ஏனென்றால் தங்கைக்கு ஒரு ஆபத்து வருகிறது.

ராஜூவைக் கொலை செய்ய கண்ணன் திட்டமிடக் காரணம், கண்ணனின் மனைவி. இப்படி படத்தில் எழுத்தில் கூடி வந்திருக்கும் சில சுவாரஸ்யங்கள் நன்றாக இருந்தது.

நடிப்பு பொறுத்தவரையில் எல்லோருமே நல்ல நடிப்பையே கொடுத்திருக்கிறார்கள், துல்கர் சல்மான் ஒரு கேங்ஸ்டராக பொறுந்திப் போகிறார். சண்டைக்காட்சிகள், கோபப்படும் காட்சிகள், உடைந்து அழும் காட்சி என அனைத்திலும் சிறப்பு. இதற்கு சமமாக ஷபீர், ஐஸ்வர்ய லஷ்மி, நைலா உஷா ஆகியோரும் கவர்கிறார்கள். ஜேக்ஸ் பிஜோயின் இசையில் கலாபக்காரா பாடல் தூள்ளலாக இருக்கிறது. படத்தின் பின்னணி இசையும் பரபரப்பைக் கூட்டுகிறது. ஆனால் இதற்கு முன்பு வேறு படங்களில் கேட்டது போன்ற எண்ணமும் எழுகிறது. நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு மற்றும் தானூரின் கலை இயக்கம் இரண்டும் கொத்தா என்ற கற்பனை உலகை கண்முன் நம்பும்படி காட்டியிருக்கிறது.

படத்தின் பிரச்சனைகள் என எடுத்துக் கொண்டால், இது ஒரு வழக்கமான கேங்க்ஸ்டர் ட்ராமாவாகவே மிஞ்சுகிறது, கதைக்குத் தேவையான போதிய ஆழமும் இல்லை. முதன்மைக் கதாபாத்திரங்களான ராஜூ - கண்ணன் இருவருக்குமான கதை மிக மேலோட்டமாக இருக்கிறது. ராஜூவுக்கு பணத்தின் மேல் ஆசையில்லை அதனால் தன் இஷ்டப்படி வாழ்கிறார். கண்ணனுக்கு ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்க ஆசை, எனவே தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் சில விஷயங்களை செய்ய வேண்டியிருக்கிறது. இந்த அளவிலேயே கதாபாத்திர விவரங்கள் சுருங்கிவிட்டது. அதனால் படத்திற்குள் போதிய அளவு ட்ராமாவோ, புதிதாக ஒரு காட்சியோ எழாமல் போகிறது. பெண் கதாபாத்திரங்களான தாரா, மஞ்சு இவர்களுக்கு கதையில் இன்னொரு பக்கமும் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அவையும் சரியாக கையாளப்படவில்லை.

அடுத்த பெரிய பிரச்சனை படத்தின் நீளம். கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் ஓடுவது பிரச்சனையில்லை. அந்த மூன்று மணி நேரத்தில் இயக்குநர் அபிலாஷ் ஜோஷி எந்த சுவாரஸ்யமும், புதுமையும் இல்லாத கதை சொல்லப்படுவதுதான் பிரச்சனை.

உலகம் முழுவதிலும் பல கேங்க்ஸ்டர் சினிமாக்கள் வந்திருக்கிறது. அவற்றில் சிறந்ததாக கொண்டாடப்படும் எல்லாவற்றிலும் அடிப்படையாக இருப்பது ஒரு மனிதனின் உளவியல். அது இந்தப் படத்தில் முற்றிலும் இல்லை. வெறுமனே இரு நண்பர்கள் எப்படி எதிரிகள் ஆனார்கள் என்ற கதையை எந்தவித ஆர்வத்தையும் தூண்டாமல் சொல்கிறார்கள்.

மொத்தத்தில் `கிங் ஆஃப் கொத்தா’ எந்த புதுமையும் இல்லாத, சற்று சோர்வையும் அளிக்கக் கூடிய படமாகவே எஞ்சுகிறது.