வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாக இருக்கும் படம் `அரசன்'. இந்தப் படம் வடசென்னை உலகத்தில் நடக்கும் ஒரு கதையாக உருவாக்க இருக்கிறது. இதன் படப்பிடிப்புகள் அக்டோபர் 15க்கு பிறகு துவங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு துவங்கும் முன்பு இப்படத்தின் புரோமோ வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது மட்டுமே உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க கன்னட நடிகர் கிச்சா சுதீப் மற்றும் உபேந்திராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் உலவி வந்தன. இதனை மறுக்கும் விதமாக, கிச்சா சுதீப் அந்தச் செய்தியை குறிப்பிட்டு X தளத்தில், "எனக்குத் தெரிந்த வரை இவை எல்லாம் வதந்திகளே. நீங்கள் உங்களுக்கு செய்தி அளிப்பவரே மாற்றுங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
எனவே சிம்புவின் 'அரசன்' படத்தில் கிச்சா சுதீப் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. இதேபோல இப்படத்தில் சமந்தாவை ஹீரோயினாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும், அனிருத் இப்படத்திற்கு இசை எனவும் சொல்லப்படுகிறது. இவை எல்லாம் உண்மையா என பொறுத்திருந்து பார்ப்போம்.