தமிழ் சினிமாவில் மிகப்பிரபலமான தம்பதி சுந்தர் சி - குஷ்பூ. சுந்தர் சி இயக்கிய முதல் படமான `முறைமாமன்' படத்தில் ஹீரோயினாக நடித்தவர் குஷ்பூ. அப்போது இவர்களுக்குள் காதல் மலர இருவரும் 2000மாவது ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அவந்திகா மற்றும் ஆனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்தமகளான அவந்திகா நகைக்கடை விளம்பரத்தின் மாடலாக வந்திருப்பது பற்றி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் குஷ்பூ.
அதில் "25 வருடங்களுக்கு முன்பு, என் மகள் பிறந்த போது, இதே செய்தித்தாளின் முதல் பக்கத்தில் இடம்பிடித்தார். அவள் மீண்டும் தோன்றி இருக்கிறாள். கேமரா முன்பான தனது பயணத்தைத் தொடங்குகிறாள். வாழ்க்கை கண்டிப்பாக ஒரு முழு வட்டம் தான். ஒரு தாயாக, என் கண்கள் ஈரமடைகின்றன மற்றும் பெருமையாலும் மகிழ்ச்சியாலும் பிரகாசிக்கின்றன. தந்தை கண்ணீரை அடக்கிக்கொண்டு சிரித்தபடி இந்தப் படத்தைப் பார்த்து அசையாமல் நின்றார். நண்பர்களும் அன்புக்குரியவர்களும் குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்தவில்லை" என பெருமையுடன் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவிற்கு பலரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிப்பில் ஆர்வம் கொண்ட அவந்திகா லண்டன் சென்று நடிப்பு கற்று வந்துள்ளார். விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் வேலைகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. இதே சமயம் இவரது சகோதரியான ஆனந்திதா மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். அவரின் `பொன்னியின் செல்வன்', `பொன்னியின் செல்வன் 2' மற்றும் `தக் லைஃப்' ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார் அவந்திகா.