Ken Karunaas Youth
கோலிவுட் செய்திகள்

பிரியாணி Vs படம்.. வைரலான கென் கருணாஸ் பதில்! | Ken Karunaas | Youth | Biriyani | Movie

வெற்றி சார் அடிக்கடி `இன்னைக்கு நான் இத பண்றேன், ஆனா என் முதல் படத்துல எனக்கு இதுகூட தெரியாது' என்பார். எனவே எல்லாமே ஒரு படிப்பினைதான்.

Johnson

கென் கருணாஸ் இயக்குநராகவும், ஹீரோவாகவும் அறிமுகமாகும் படம் `யூத்'. மார்ச் 19ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படம் சம்பந்தமாக பல பேட்டிகளை அளித்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் படத்துக்கு வரும் நெகட்டிவ் ரிவ்யூ பற்றிச் சொன்ன பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் கென் பேசியபோது, "இதில் (யூத்) நானுமே நிறைய தவறுகள் செய்திருக்கலாம். அது படம் வந்த பின்புதான் எனக்கே புரிய ஆரம்பிக்கும். அடுத்து திருத்திக் கொள்வேன். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள நான் தயார்தான். ஆனால், புதிதாக வருபவருக்கு பார்வையாளர்களிடம் இருந்து ஓர் ஆதரவு கிடைத்தால் நன்றாக இருக்கும்.

அதற்காக நன்றாக இல்லாத படத்தை, ’நன்றாக இருக்கிறது’ எனச் சொல்லுங்கள் என்று சொல்லவில்லை. படத்தில் இருக்கும் சின்னச் சின்ன குறைகளை மன்னித்து, ’இனிமேல் கற்றுக் கொள்வான்’ எனச் சொன்னால் நன்றாக இருக்கும். வெற்றி சார் அடிக்கடி `இன்னைக்கு நான் இத பண்றேன், ஆனா என் முதல் படத்துல எனக்கு இதுகூட தெரியாது' என்பார். எனவே எல்லாமே ஒரு படிப்பினைதான். நான் அறிமுக இயக்குநர்கள் பலரின் படங்களைப் பார்த்து கற்றுக் கொண்டேன். அதில் குறைகள் இருந்திருக்கின்றன. ஆனால், புதிதாக வருபவருக்குப் பார்வையாளர்களின் ஆதரவு இருந்தால், அந்த தவறை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு அமையும்.

இதற்கு இன்னொரு உதாரணமும் சொல்கிறேன். ஒருமுறை நான் என் தம்பி ஒருவரிடம், 200 ரூபாய்க்கு ஒரு படத்துக்கு போகிறோம், 200 ரூபாய்க்கு ஒரு பிரியாணி சாப்பிடுகிறோம். பிரியாணி நன்றாக இல்லை, படமும் நன்றாக இல்லை. ஆனால் பிரியாணி சாப்பிட்ட பிறகு `பிரியாணி சுமாரா இருக்கு, இனி இந்த கடையில சாப்பிட வேண்டாம்' என சொல்லி கடந்துவிடுகிறோம். ஆனால் படம் நன்றாக இல்லை என்றால், அவன் பரம்பரையையே திட்டுகிறீர்கள்.

Ken Karunaas

ஏன் இதைச் செய்கிறோம் எனக் கேட்டேன். அதற்கு அவர் `பிரியாணி சாப்பிடும்போது எனக்குப் பசி என்ற தேவை முடிந்துவிடுகிறது. சுவை என்பது அடுத்தகட்ட தேவைதான். அதை நான் இன்னொரு கடையில் சாப்பிட்டுக்கூட பெற முடியும். ஆனால், நீங்கள் இரண்டரை மணிநேரம் உட்காரவைத்து, உரி உரியென உரிக்கிறீர்கள். வெளியில் வரும்போது எங்கள் மொத்த ஏமாற்றத்தையும் கொட்டதானே முடியும்’ என்றார்" என கூறியுள்ளார்.