சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய ‘கருப்பு’ மே 15 வெளியீட்டிலிருந்து வசூல், வரவேற்பில் பெரிய வெற்றி கண்டுள்ளது. நன்றியறிதலாக இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணு, எடிட்டர் கலைவாணன் ஆகியோருக்கு சூர்யா சொகுசு கார்கள் பரிசளித்தார். இந்த வெற்றிக்கு பின்னால் விஜயின் மறைமுக பங்களிப்பும் இருப்பதாக பாலாஜி கூறுகிறார்.
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். மே 15ம் தேதி வெளியான படத்துக்கு வசூலும், வரவேற்பும் மிக பெரிய அளவில் கிடைத்துள்ளது. இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இசையமைப்பாளர் சாய் அப்பியங்கர், ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணு மற்றும் படத்தொகுப்பாளர் கலைவாணன் ஆகியோருக்கு சொகுசு கார் பரிசளித்தார் சூர்யா.
இப்படம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த ஆர் ஜே பாலாஜி, இப்படத்தின் கதையை முதலில் விஜயிடம் சொன்னது பற்றி பகிர்ந்திருந்தார். அதில் "இந்தப் படத்தின் கதையை நான் முதலில் விஜய் சாருக்கு தான் கூறினேன். இதுதான் அவரது கடைசி படமாக இருந்திருக்க வேண்டியது. நாங்கள் இரண்டு மூன்று முறை சந்தித்தோம். ஆனால் இது அவரது கடைசி படம் என்பதால், அவரது அரசியல் பயணத்தை மனதில் வைத்து அவர் சில முடிவுகள் எடுக்க வேண்டி இருந்தது. இதனை கடைசி படமாக செய்வதா? அல்லது வேறு படத்தை செய்வதா? என்ற கேள்வி இருந்தது. இன்னொரு ஆப்ஷனாக ஹெச் வினோத் இருந்தார்.
எனக்கு ஒருவாரம் அவகாசம் கொடுக்க முடியுமா என்றார் விஜய் சார். பின்னர் அவரே அழைத்து எதனால் இந்தப் படத்தை செய்ய முடியாது என்ற காரணங்களை கூறினார். அவை அனைத்தும் எனக்கு நியாயமாக தோன்றியது. நான் உங்கள் முடிவை முழுவதுமாக மதிக்கிறேன் எனக் கூறி விடைபெற்றேன். நான் அந்த காலத்திற்குள்ளாகவே அவருக்கு இந்தக் கதையும், இதில்லாமல் இன்னொரு கதையும் கூட கூறி இருந்தேன். இரண்டையுமே அவர் என்னை மதித்து கேட்டார்.
இதன் மூலம் தான் சூர்யா சாரின் படம் அமைந்தது. தயாரிப்பாளர் வந்து நீங்கள் விஜய் சாருக்கு சொன்ன கதையை சூர்யா சாருக்கு சொல்ல முடியுமா எனக் கேட்டார். சூர்யா சார் எனக்கு கிடைக்க ஒரு காரணம் விஜய் சார் என்பதால் தான் அவருக்கு நன்றி தெரிவித்து கார்டு போட்டோம். மேலும் விஜய் சார் கதையில் சில கேள்விகள் கேட்டார். அந்தக் கேள்விகள் என் கதையை இன்னும் நேர்த்தியாக்க உதவியது." என்றார்.