Ilaiyaraaja Karthik Subbaraj
கோலிவுட் செய்திகள்

இளையராஜாவின் 1,540ஆவது படம்.. முதல்முறையாக கார்த்திக் சுப்புராஜ் - ராஜா கூட்டணி! | Ilaiyaraaja

எனக்கு சினிமாவும் இசையும் உணர்வுப்பூர்வமானவை. ஒரு கதையின் நேர்மையும், அதைச் சொல்லும் மனிதர்களின் உண்மையும்தான் முக்கியம். கார்த்திக் சுப்புராஜ் உடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Johnson

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ போன்ற திரைப்படங்களைக் கொடுத்தவர், அடுத்ததாக கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தனது பத்தாவது படத்தைத் துவங்கினார். புதுமுகங்களின் நடிப்பில் உருவாகி வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்திற்காக முதல்முறை இளையராஜாவுடன் பணியாற்றுகிறார் கார்த்திக் சுப்பராஜ். இது இளையராஜாவின் 1,540வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இசைஞானி இளையராஜா இப்படம் பற்றி பகிர்ந்து கொண்டபோது, "எனக்கு சினிமாவும் இசையும் உணர்வுப்பூர்வமானவை. ஒரு கதையின் நேர்மையும், அதைச் சொல்லும் மனிதர்களின் உண்மையும்தான் முக்கியம். கார்த்திக் சுப்புராஜ் உடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சினிமா மீதான அவரது ஆர்வம் அவருடைய பணிகளில் தெளிவாகத் தெரிகிறது. ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனி உணர்வும், இசையும் உண்டு. இந்தப் படத்தின் பின்னணி இசை அமைக்கும்போது, அந்த இசையை தனி ஆல்பமாகவே வெளியிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அந்த அளவுக்குச் சிறப்பாக உருவாகியுள்ளது. என் ரசிகர்கள் அதை மிகவும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்து கொண்டபோது, "கலையை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. கலைதான் நம்மைத் தேர்ந்தெடுக்கிறது என்று பலர் சொல்வார்கள். என் பயணமே அதற்குச் சான்று. இசைஞானி இளையராஜா சார் உடன் பணியாற்றுவது என் வாழ்நாள் கனவு. அது என் பத்தாவது படத்தில் நனவாகியிருப்பது சிறப்பான தருணம். பல ஆண்டுகளாக அவரது இசையைக் கொண்டாடி வந்த ஒருவனாக அவருடன் இணைந்திருப்பது எனக்கு தனிப்பட்ட முறையிலும், தொழில்ரீதியாகவும் உணர்வுப்பூர்வமான தருணம். இந்தப் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க ஆவலுடன் உள்ளேன்" என்றார்.

Ilaiyaraaja

இப்படத்தை, ஆஸ்கர் விருது பெற்ற சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் குனீத் மோங்கா கபூர் மற்றும் அசின் ஜெயின் தலைமையில், ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. உலகளவில் பாராட்டப்படும் இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் கார்த்திக் சுப்புராஜ் முதன்முறையாக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.