இந்திய சினிமாவில் தவிர்க்கவே முடியாத கலைஞன் கமல்ஹாசனின் 71வது பிறந்தநாள் இன்று. ஒரு நடிகனின் வாழ்க்கை அவனுடைய கதாபாத்திரங்களால் அளக்கப்படுகிறது. ஆனால் கமல்ஹாசனின் வாழ்க்கை, அது ஒரு கலைஞனின் புரட்சி என தான் சொல்லமுடியும். 6 வயதிலேயே சினிமாவின் கையில் தவழ ஆரம்பித்தவர் இன்று தமிழ் சினிமாவின் அடையாளமாகவும், உலக சினிமா நோக்கி இந்திய சினிமாவை அழைத்துச் செல்லும் நபரில் முதன்மையானவராகவும் இருக்கிறார்.
கருப்பு வெள்ளை காலகட்டத்தில் இருந்து ஐமாக்ஸ் காலம் வரை திரையில் தொழிநுட்பங்கள் மாறினாலும், புதிது புதிதாக சினிமாவில் புதுமைகளை புகுத்த நினைக்கும் கமலின் எண்ணம் மாறியதே இல்லை. ஒரு நடிகராகவும், படத்துக்குப் படம் தன்னுடைய சவால்களை கூட்டிக் கொண்டே போனவர் தான் கமல்ஹாசன். அப்படி ஒரு நடிகராக தன்னை தொடர்ச்சியாக நகர்த்திய கமலை பற்றியே இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.
ஒரு உதவி இயக்குநராக, நடன வடிவமைப்பாளராக என இயங்கிக் கொண்டிருந்த கமலை, நடிப்பு நோக்கி தள்ளியது கே பாலச்சந்தர். ஒருவகையில் நடிப்புக்கு கமல் வந்ததே முதல் நகர்வு என எடுத்துக் கொள்ளலாம். ஆரம்ப காலகட்டங்களில் `அரங்கேற்றம்', `சொல்லத்தான் நினைக்கிறேன்', `பருவ காலம்' போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவர், மெல்ல மெல்ல `அபூர்வ ராகங்கள்', `16 வயதினிலே' படங்களில் என முதன்மையான பாத்திரங்களில் நடிக்க துவங்கினார். அந்த ஆரம்ப கட்டத்திலேயே மலையாள சினிமாவிலும் நடிக்க துவங்கி இருந்தார். மேலும் ஒரு வழக்கமான நடிகர் போல் இல்லாமல் துவக்க காலங்களிலேயே, மிக மாறுபட்ட வேடங்கள் அத்தனையிலும் நடித்தார். அதுவே ஒரு நடிகராக அவர் செய்த மீறல்.
ஒரு பக்கம் கமர்ஷியல் படங்கள் இன்னொரு பக்கம் தரமான மாற்று சினிமாக்கள் என அவரின் பயணம் மிக அலாதியாக துவங்கியது. மாற்று சினிமா என்பது தாண்டி, கமர்ஷியல் படங்களிலும் என்ன வித்தியாசம் எல்லாம் செய்ய முடியும் என சிந்திக்கத்துவங்கினார். உதாரணமாக `வறுமையின் நிறம் சிகப்பு' படம் கமர்ஷியல் படமாக இருக்கும் அதே வேளையில் அன்றைய காலகட்டத்தில் நிலவிய வேலையில்லா திண்டாட்டத்தை பேசவும் செய்தது. வெறும் நாயக பிம்பத்தை மட்டும் உயர்த்தும் படங்களை தேடாமல், தொடர்சியாக மாற்றுகளை தேடிக் கொண்டே இருந்தார்.
ஒரு கட்டத்தில் அது நடிகனின் தேடல் என்பதைத் தாண்டி ஒரு கதாசிரியனின், இயக்குநரின் தேடலாகவும் தன்னை நகர்த்திக் கொண்டார். எதிர்பாரா விதமாக `அவ்வை ஷண்முகி' இந்தி ரீமேக்கான `சாச்சி 420' படம் தான் இயக்குநராக அவரின் முதல் படமாய் அமைந்தது. `ஹேராம்' மூலம் காந்தியத்தை பற்றி மிக ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் ஒரு படைப்பாக நம் முன் வைத்தார். `விருமாண்டி' என்ற படத்தில் ஒருந்த செய் நேர்த்தியும், கலை நேர்த்தியும் சொல்லி மாளாது. இந்திய சினிமாவில் மிக சுவாரஸ்யமான ஸ்பை த்ரில்லர் படமாக உருவானது `விஸ்வரூபம்'. இயக்குநராக பல ஆச்சர்யங்களை நம் முன் வைத்து பல அடிகள் கலையில் முன்னோக்கி நகர்ந்தார்.
ஒருகட்டத்தில் கலைஞனாக மாறி சினிமாவுக்குள் பல விஷயங்களை கொண்டு வந்தார். `விக்ரம்' படத்தில் ஸ்டெடிகேம் கொண்டு வந்தது, `மகாநதி' படத்தில் AVID எடிட்டரை பயன்படுத்தியது, `குருதிப்புனல்' படத்தில் Dolby Stereo surround SR தொழில்நுட்பத்தை கொண்டு வந்தது, `இந்தியன்' படத்தில் Prosthetic makeup பயன்படுத்தியது என ஒரு பக்கம் ஹாலிவுட் பட தொழிநுட்பங்களை இந்திய சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். இன்னொரு புறம் ஆளந்தானின் ரத்தம் தெறிக்கும் சண்டைக்காட்சிக்கு அனிமேஷனை பயன்படுத்தி, குவென்டின் டாரண்டினோ இயக்கிய KILL BILL படத்தின் அனிமேஷன் சண்டைகாட்சிக்கே உந்துதலாக இருந்தார்.
சினிமாவில் கமல் தான் இதை செய்தார் என சொல்ல பல சாதனைகளை உண்டு. அவரது கலை தன்மையை பாராட்ட ஏகப்பட்ட தருணங்களும் உண்டு. இதைத் தாண்டியும் கமலால் இன்னும் பல சாதனைகளை புரிய முடியும், ஆனால் அவர் செய்த எல்லாவற்றையும் ஒரு தொகுப்பில் சொல்ல முடியாது. இன்னும் அவர் இந்த சினிமாவில் பல விஷயங்களை செய்ய அவரது பிறந்தநாளில் நாம் வாழ்த்துவோம்.