கமல்ஹாசன் நடிப்பில் அன்பறிவ் இயக்கத்தில் உருவாகும் `KH237' படம் கடந்த ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. அப்போது மணிரத்னம் இயக்கி வந்த `தக் லைஃப்' படம் உருவாக்கிக் கொண்டிருந்தது, அதனை முடித்து உடனே இந்தப் படத்தை துவங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆகப்போகிறது, இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை.
இந்த நிலையில் படம் பற்றிய புதிய தகவலை வெளியிட்டுள்ளார் கமல். இந்தப் படத்தின் எழுத்தாளராக `Salt N' Pepper', `22 Female Kottayam', `Mayanadhi', `Rifle Club', Maheshinte Prathikaaram', `Thondimuthalum Driksakshiyum', `Kumbalangi Nights' எனப் பல மலையாளப்படங்களில் எழுத்தாளராக பணியாற்றிய
ஷியாம் புஷ்கரன் இணைந்தார் என செப்டம்பர் மாதம் அறிவித்தனர். இந்த சூழலில் அடுத்தகட்ட குழுவினரை நேற்று கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு அறிவித்தார்.
மலையாளத்தில் `Ishq', `Ayyappanum Koshiyum' `Jana Gana Mana' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜோய் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டான `லோகா' படத்திற்கும் இவர் தான் இசை. தமிழில் `துருவங்கள் பதினாறு', `போர் தொழில்', தெலுங்கில் `சரிபோதா சனிவாரம்' போன்ற படங்களின் மூலமும் கவனிக்க வைத்தார். கடந்த ஆண்டு வெளியாகி மிப்பெரிய பாராட்டுளை பெற்ற `ஆடு ஜீவிதம்' பட ஒளிப்பதிவாளர் சுனில் கே எஸ் தான் `KH237'க்கு ஒளிப்பதிவாளர். டூனி ஜான் விளம்பர வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
இப்படத்திற்கு படத்தொகுப்பாளராக பணியாற்றுவது ஷமீர் மொஹம்மத். மலையாளத்தில் `சார்லி', `அங்கமாலி டைரீஸ்', `தண்ணீர் மத்தன் தினங்கள்', `ரேகசித்ரம்' போன்ற படங்களின் மூலம் கவனிக்கப்பட்டவர் ஷமீர். படத்தின் கலை இயக்குநரான வினேஷும் மலையாளப்படங்களில் பணியாற்றியவர். சமீபத்தில் லக்கி பாஸ்கர், காந்தாரா சாப்டர் 1 படங்களிலும் இவர் பாராட்டுகளை பெற்றார். `KH237' படக்குழுவில் பலரும் மலையாள சினிமாவை சேர்ந்த கலைஞர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ், இப்படத்தின் மூலம் இயக்குநர்களாக களம் இறங்குகின்றனர். இது ஒரு ஆக்ஷன் படமாக உருவாக இருக்கிறது.