விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம், ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது. விஜயின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்த தணிக்கை வாரியம், சில மாற்றங்களைக் கூறியது. அதனை படக்குழு செய்த பின்னரும் சான்றிதழ் தருவதில் தாமதம் ஏற்பட, நீதிமன்றத்தை நாடியது படக்குழு. அதனை எதிர்த்து தணிக்கை வாரிய தரப்பும் நீதிமன்றத்தில் வாதிட்டது. கடைசியாக படக்குழு தங்கள் வழக்கை வாபஸ் பெற்று, படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப ஒப்புக் கொண்டது.
அதன்படி, ரிவைசிங் கமிட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு படத்தைப் பார்ப்பதாக இருந்தது. இந்த தகவலை ஒரு வாரத்துக்கு முன்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு மெயில் மூலம் தெரிவித்துள்ளனர். ஆனால், இன்று நடைபெற இருந்த மறு ஆய்வு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கமிட்டி உறுப்பினர்களில் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதுதான் இதற்குக் காரணம் என தகவல்.
மேலும் ரிவைசிங் கமிட்டி படத்தை மார்ச் 17 பார்ப்பார்கள் என சொல்லப்படுகிறது. எனவே, இதனால் ‘ஜனநாயகன்’ படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் தொடர்கிறது.