லெஜெண்ட் சரவணா நடிப்பில் 'லீடர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்வில், அரசியல் சார்ந்த காட்சிகள் இல்லாமல், கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஒரு பாசமான அப்பா-மகள் வாழ்க்கையில் கேங்க்ஸ்டர் வருகை, அதன் பின்னர் நிகழும் சம்பவங்களை திரைக்கதை அமைத்து, ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் படத்தை வழங்கியுள்ளார்.
லெஜெண்ட் சரவணா நடிப்பில் R.S. துரை செந்தில்குமார் இயக்கியுள்ள படம் 'லீடர்'. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ப்ஸ் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய லெஜெண்ட் சரவணா "லீடர் என்ற தலைப்பை பார்த்ததும் அரசியல் படம் என நினைக்க வேண்டாம். இதில் அரசியல் சார்ந்த காட்சிகளோ, வசனமோ ஒரு துளியும் கிடையாது. இது முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு படம். ஒரு பாசமான அப்பா - மகள் வாழ்க்கையில் ஒரு கேங்க்ஸ்டர் வருகிறான், அதன் பிறகு நடக்கும் விஷயங்களை தான் இயக்குநர் துரை செந்தில்குமார் அற்புதமாக திரைக்கதை அமைத்து உருவாக்கி இருக்கிறார். படத்தை இன்றைய ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக கொடுத்திருக்கிறார்.
சின்ன வயதில் இருந்தே சினிமாவில் எனக்கு ஆர்வம். வீட்டு பிரிட்ஜில் ஒரு பக்கம் ஷாருக்கான், இன்னொரு பக்கம் சல்மான் கான் படத்தை ஒட்டி வைத்திருப்பேன். என் தாயாரிடம் ஒருநாள் நானும் இது போல நடிகர் ஆவேன் என சொல்வேன். அவர் சிரித்துக் கொண்டே சந்தோசம் என்பார். ஆனால் என்னுடைய தந்தையின் மீதிருந்த மரியாதையால், அவரது தொழிலை இணைந்து எடுத்து நடத்த வேண்டிய சூழல் வந்தது. கடைக்கு முதல் ஆளாக சென்று கடைசி ஆளாக கிளம்புவதை போல தான், சினிமாவிலும் தொடர்கிறேன்.
இந்தப் படத்தின் முதல் சிங்கிள் 14ம் தேதியும், அடுத்த க்ளிம்ப்ஸ் மார்ச் 6ம் தேதியும் வெளியிடுகிறோம். படத்தை ஏப்ரலில் வெளியிடுவதற்கான எல்லா பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது." என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் லெஜெண்ட் சரவணா.
ஜனநாயகன் படத்திலும் ஒரு குழந்தை தந்தை கதைதான். இதிலும் அதே தான் இருப்பது போல தெரிகிறது?
"அது வேறு கதை, இது முற்றிலும் வேறு கதை. இதனை நாங்கள் ஒரு வருடத்திற்கு முன்பே தயார் செய்துவிட்டோம். கண்டிப்பாக இது புதிய ஒரு கதை."
விஜய் அரசியலுக்கு போய்விட்டார், அஜித் எப்போதாவதுதான் படம் செய்கிறார். அந்த இடத்தை நிரப்ப நீங்கள் வந்திருப்பதாக சொல்லப்படுகிறதே?
"எதிலும் முழுமுயற்சியுடன் இறங்குவேன். அப்படித்தான் இதிலும் இறங்கியுள்ளேன். மக்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுகிறோம்."
முதல் படத்துக்கு வந்த விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?
"எப்போதும் புதிதாக ஒருவர் வரும் போது விமர்சனங்கள் வரும். ரஜினி சாருக்கு வராத விமர்சனமா? விமர்சனங்கள் வந்தாலும், நம்பிக்கையுடன் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். ஒரு வெற்றி வரும் போது அந்த விமர்சனங்கள் எல்லாம் பாசிட்டிவாக மாறிவிடும். இதுதான் என்னுடைய கொள்கை."
சமூக வலைத்தளங்களில் உங்களை பற்றி வரும் மீம்ஸை கவனிப்பதுண்டா?
"அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இன்றைக்கு அது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அதை தவிர்க்க முடியாது. நாம் என்ன செய்கிறோம் என்பதில் தான் கவனமாக இருக்க வேண்டும்."
முதல் படத்தின் பெயர் லெஜெண்ட் அதனால் லெஜெண்ட் சரவணன், இந்தப் பட பெயர் லீடர் இனிமேல் லீடர் சரவணாவா?
"படத்தின் பெயர்தான் லீடர், என்னுடைய பெயர் லெஜெண்ட் சரவணன் தான். சரவணன் என தான் பெயர் இருந்தது, கடையின் பெயரும் இணைந்து கொண்டதால் லெஜெண்ட் சரவணன் என தொடர்கிறேன்."