Pradeep E Ragav Jana Nayagan
கோலிவுட் செய்திகள்

‘ஜனநாயகன்’ படத்தொகுப்பாளர் பிரதீப் தற்காலிக நீக்கம்! | Jana Nayagan | SIFEA

சங்கத்தின் சட்ட விதிகளை மதிக்காமல் தொடர்ந்து `ஜனநாயகன்' உட்பட தான் பணியாற்றும் அனைத்து திரைப்படங்களுக்கும் சங்க உறுப்பினர் அல்லாதவர்களை உதவியாளராகப் பயன்படுத்துவது சங்க செயற்குழு முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Johnson

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம், ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். CBFC சான்றிதழ் வழங்குவதில் சிக்கல்கள் காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கும் இப்படம், எதிர்பாராத விதமாக ஏப்ரல் 9ஆம் தேதி மாலை இணையத்தில் வெளியானது. இது சம்பந்தப்பட்ட நபர்களைக் காவல் துறை கைது செய்துள்ளது. இப்படத்தின் கசிவுக்கு `ஜனநாயகன்' படத் தொகுப்பாளர் பிரதீப் E ராகவ் காரணம் அல்ல என தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர் சங்கத் தலைவர் (SIFEA) கோபி கிருஷ்ணா செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். இந்த நிலையில் இன்று தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர் சங்கம் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளது. அதில் பிரதீப் E.ராகவ் இந்த நிகழ்வுக்கு நேரடியாக காரணம் இல்லை என்றாலும், அவரது கவனக்குறைவுதான் இதற்குக் காரணம். எனவே தற்காலிகமாக சங்கத்திலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

Jana Nayagan

இது சம்பந்தமாக வெளியிடப்பட்ட கடிதத்தில், "படத்தொகுப்பாளர் பிரதீப் E. ராகவ் தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர் சங்கத்தின் சட்ட விதிகளை மதிக்காமல் தொடர்ந்து `ஜனநாயகன்' உட்பட தான் பணியாற்றும் அனைத்துத் திரைப்படங்களுக்கும் சங்க உறுப்பினர் அல்லாதவர்களை உதவியாளராகப் பயன்படுத்துவது சங்க செயற்குழு முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு சங்க சட்டவிதிகளுக்கு எதிரானது. மேலும் ’ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாக நேரடியாக பிரதீப் E ராகவ் காரணம் இல்லை என்றாலும், அவரது கவனக்குறைவே காரணமாக அமைந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நிலை தொடர்ந்தால் திரைப்பட துறையே செயலிழந்து போகும் அபாயம் உள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கும் கடமை தென்னிந்திய திரைபடத் தொகுப்பாளர் சங்கத்திற்கு உள்ளது. திரைத்துறையின் பாதுகாப்பு மற்றும் சங்கத்தின் மாண்பைக் காப்பாற்ற வேண்டி 17.04.2026 அன்று நடந்த அவசர செயற்குழுக் கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னணி முன்னிலையில் படத்தொகுப்பாளர்கள் கலந்தாலோசிக்கப்பட்ட கருத்துகளை கவனத்தில் கொண்டு பிரதீப் E. ராகவை தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம் 'இடைநீக்கம்’ செய்து இந்த அறிவிப்பை வெளியிடுகிறது.

Pradeep E Ragav

இந்த இடைநீக்க காலத்தில் சங்கம் பிரதீப் E ராகவ்-க்கு எந்தவிதமான ஒத்துழைப்பும் வழங்காது எனவும், மேலும் சகோதர சங்கங்கள் இந்த அறிவிப்புக்கு முழு ஆதரவு தருமாறும் கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.