ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் `ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்புகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபகாலமாக கோவாவில் நடைபெற்று வந்தது. இப்போது கோவா சார்ந்த காட்சிகள் நிறைவடைந்துள்ளது.
படத்தின் முக்கியமான ஆக்ஷன் காட்சிகள் கோவாவில் படமாக்கப்பட்டுள்ளன. இதனை முடித்துவிட்டு நேற்று இரவு சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். இதனையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்புகள் இந்தியாவின் பல இடங்களில் நடைபெறும் என சொல்லப்படுகிறது.
2023ல் வெளியான ஜெயிலர் படத்தின் சீக்குவலாக உருவாகிவரும் இப்படத்தில் ஆக்ஷனும் எமோஷனும் அதிகமாக இருக்கும் படி உருவாகி வருகிறதாம். முதல் பாகத்தில் முத்துவேல் பாண்டியனாக வந்த ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார். மேலும் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் போன்றோரின் கெஸ்ட் ரோலும் பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
இந்த பாகத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் மிர்னா ஆகியோர் மீண்டும் நடிக்கின்றனர். மேலும் வித்யா பாலன் மற்றும் அன்னா ராஜன் ஆகியோர் இணைகிறார்கள். சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் ஆகியோர் மீண்டும் தங்கள் கேமியோ தோற்றங்களில் நடிப்பார்கள் என்றும், நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பார்கள் என்றும் சொல்லப்படுகின்றது. இந்தப் படம் ஜூன் 12, 2026 அன்று வெளியாக உள்ளது.