சோமேந்திரன் இயக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் `நீளிரா'. இப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் "படங்கள் இயக்க வேண்டும் என்பது தான் என் கனவாக இருந்தது. படங்கள் இயக்க ஆரம்பித்த போது ஸ்டோன் பென்ச் என்ற நிறுவனத்தின் மூலம் படங்கள் தயாரிக்க வேண்டும் என தோன்றியது. என்னுடைய மனதில் இருக்கும்படியான கதைகளை செய்ய வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. எப்போதும் ஸ்டோன் பென்ச் படங்களில் என் பெயரை பிரசண்ட்ஸ் என போட்டு கார்த்திகேயன் பெயரை புரொட்யூசர் எனப் போடுவோம். ஆனால் இந்தப் படத்தில் என் பெயரையும் புரொட்யூசரில் போட சொன்னேன். அந்த அளவு இது எனக்கு பிடித்த படம்.
சோமே பேசும் போது மிகுந்த உணர்வோடு பேசினார். அவர் படம் எடுப்பதற்கு முன்பு ஒரு ஆவணப்பட இயக்குநர். போரின் போது அதனை ஆவணப்படுத்தும் பணிகளில் இருந்திருக்கிறார். பத்திரிகையாளராக இருந்திருக்கிறார். அவர் பத்திரிகையாளராக இருந்த கதையே சுவாரஸ்யமான கதை. அவருக்குள் நிறைய கதைகள் இருக்கிறது. எனக்கு ஈழம் சார்ந்த ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பு இருக்கிறது. என்னுடைய முதல் குறும்படமாக எடுத்த காட்சிப்பிழை கூட ஈழம் சார்ந்தது தான். சின்ன வயதில் இரு விமானம் செல்வதை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். மதுரையில் இருக்கும் பசங்களுக்கு விமானம் என்ன சந்தோசம் தருகிறது, குழந்தைக்கு சோறு ஊட்டும் அம்மாவுக்கு எப்படி இருக்கிறது என ஒவ்வொன்றும் காட்டி, அதே விமான சத்தம் ஈழத்தில் உள்ள பசங்களுக்கு என்ன மாதிரி பயத்தை கொடுக்கும் என்பதுதான் அந்த குறும்படம். அதுதான் நாளைய இயக்குநரில் நான் தேர்வாக காரணமான படம்.
பியானிஸ்ட் என்ற ஒரு போர் படம் இருக்கிறது. அதை பார்த்த போது எனக்குள் வந்த உணர்ச்சிகள் பயங்கரமானது. இந்த மாதிரி படங்கள் செய்ய வேண்டும் என தோன்றியது. நாம் பார்த்திராத கேட்டிராத கதைகளை சோலா சினிமா பயன்படும். அப்படி சோமியை சந்தித்த போது, பாலு மகேந்திரா சாருடன் பணியாற்றியது குறித்து சொல்வார். அவர் படம் இயக்க வேண்டும் என முடிவு செய்த போது அவரின் கதைகளை கேட்டேன். அப்படி அவர் சொன்ன கதை தான் இது. போர் பற்றி எதுவும் தெரியாது என்றாலுமே இந்தப் படம் சுவாரஸ்யமாக தான் இருக்கும்." என்றார்.