சமீப காலமாக முகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பேசப்பட்டதை முன்னிட்டு, Autoimmune நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை வெளிப்படையாக கூறியுள்ளார் விஷ்ணு விஷால். மருந்து பக்கவிளைவால் சோர்வாகத் தோன்றினாலும், உடல்நல சிகிச்சை அவசியம் என்பதால் அதைத் தொடர்கிறார். ரசிகர்களின் அக்கறை, ஆதரவு, ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்கான பொறுப்புணர்வு ஆகியவை தன்னை முன்னேற்றுகின்றன எனவும், ஜூலை 3 வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்குகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் ஜூலை 3ம் தேதி `கட்டா குஸ்தி 2' படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பல பேட்டிகளை விஷ்ணு அளித்து வருகிறார். அதில் அவரது முகத்தில் சில மாறுபாடுகள் இருப்பது குறித்து பலரும் பேசி வருகின்றனர். தற்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விஷ்ணு விஷால். அதில் "அனைவருக்கும் வணக்கம், முதலில், உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் மனமார்ந்த நன்றி. சமீபத்திய என்னுடைய போஸ்ட் அனைத்திலும் நீங்கள் சொன்ன அத்தனை சுமெண்ட்ஸ்களையும் நான் பார்த்தேன். அது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது. அதனால் இந்த விஷயத்தை உங்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
சமீப காலமாக என் முகம் சோர்வாக இருப்பது போல இருப்பதை பலர் கவனித்திருக்கிறீர்கள். அதற்குக் காரணம். கடந்த 3-4 ஆண்டுகளாக நான் ஒரு Autoimmune நோயால் பாதிக்கப்பட்டு வருகிறேன். அதற்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை இடையிடையே எடுத்துக்கொண்டு வருகிறேன். அந்த மருந்துகளின் பக்கவிளைவு தான் அந்த சோர்வு ஆனால் தற்போது நான் மேற்கொண்டு வரும் இந்த சிகிச்சை என் உடல்நலத்திற்கு மிகவும் அவசியமானது. அதே சமயம், நீங்கள் காட்டும் அன்பும் ஆதரவும், நான் நம்பிக்கையுடன் செய்து வகும் வேலையும், மேலும் `கட்டா குஸ்தி 2' படத்திற்காக இரவு பகலாக உழைத்த ஒவ்வொருவரிடமும் எனக்குள்ள பொறுப்புணர்வும் என்னை தொடர்ந்து முன்னேறச் செய்கின்றன. அதனால்தான் உடல்நிலை சவால்கள் இருந்தபோதிலும், படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன்.
என் உடல்நிலை விரைவில் குணமாகிவிடும். நீங்கள் காட்டிய அக்கறை, என்னை இன்னும் சிறப்பாக என் உடல்நலத்தை கவனித்துக்கொள்ள ஊக்குவித்துள்ளது. ஒவ்வொரு கமெண்ட்ஸ் மற்றும் கருத்துக்கும், ஒவ்வொரு ஆதரவுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். இப்போது கட்டாகுஸ்தி படத்தின் ப்ரோமோசன் வேலைகளில் இறுதிகட்ட பணிகளில் நாங்கள் இருக்கிறோம். மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறேன். வரும் ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் "கட்டா குஸ்தி 2" படத்தை நீங்கள் அனைவரும் கண்டுகளித்திட காத்திருக்கிறேன்.