R J Balaji, Vijay, Suriya x
கோலிவுட் செய்திகள்

சூர்யா நடித்துள்ள `கருப்பு', விஜய்க்கு சொன்ன கதையா? - ஆர்.ஜே பாலாஜி பதில் | Vijay | Suriya | Karuppu

இந்தக் கதை 2023ல் எழுத ஆரம்பித்தேன். அதன் பின் ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் புது புது மாற்றங்கள் அந்தக் கதையில் நடக்கும்.

Johnson

சூர்யா த்ரிஷா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தின் வேலைகள் எல்லாம் நிறைவடைந்து வெளியீட்டுக்காக தயாராகி வருகிறது. சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட ஆர் ஜே பாலாஜியிடம், கருப்பு படம் பற்றி கேட்கப்பட, "நான் இரண்டு வருடங்களாக ஒரு படம் எடுத்து வருகிறேன், அந்தப் படத்தின் பெயர் கருப்பு. படம் இப்போது முடிந்து, ரிலீசுக்கு தயாராக இருக்கிறது என்பதால் தான் இப்போது வெளியே வருகிறேன். பொதுவாக பட  வெளியீட்டுக்கு முன் பயங்கரமாக பில்டப் கொடுத்து, படம் வெளியான பின் அவர்கள் எதிர்பார்த்த அளவு இல்லை என்றால் செம்ம அடி அடிக்கிறார்கள். ஆனால், நான் எப்போதும் உண்மையாக இருக்க விரும்புவேன். ஏனென்றால், ஒரே ஒரு படத்துடன் இந்த இடத்தை விட்டு போகப்போவது கிடையாது. ஒரு விஷயம் சொல்லும் போது உண்மையாக இருக்கிறது என்றால், அடுத்த முறை நாம் சொல்லும்போதும் நம்புவார்கள். கருப்பு படம் ரொம்ப நன்றாக இருக்கும், உங்களுக்கு பிடிக்கும். எப்போது வந்தாலும், நீங்கள் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படமாக இருக்கும். எல்லோருக்கும் ஏற்ற பொழுதுபோக்கு படம்." என்றார்.

சூர்யா - ஆர்ஜே பாலாஜி

மேலும் விஜயிடம் கூறிய கதையை தான் இப்போது சூர்யாவை வைத்து எடுத்திருக்கிறீர்களா? எனக் கேட்டதும் "இந்தக் கதை 2023ல் எழுத ஆரம்பித்தேன். அதன் பின் ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் புது புது மாற்றங்கள் அந்தக் கதையில் நடக்கும். ஒவ்வொரு முறை ஒவ்வொருவரை மனதில் வைத்து எழுதும்போதும் வேறுவேறாக இருக்கும். இந்த மாதிரி நிறைய வெர்ஷன் போனது. ஆனால், நான் சூர்யா சாருக்கு சொன்ன கதை, அவரை மனதில் வைத்து எழுதியது தான். சூர்யா சாருக்கு 40 நிமிடங்கள் கதை கூறினேன், அவருக்கு மிகவும் பிடித்தது. கதை சொல்லி ஒரே மாதத்தில் ஷுட்டிங் சென்றுவிட்டோம்." என்றார்.

சாய் அப்யங்கரை இப்படத்தில் இசையமைக்க வைத்தது பற்றி கேட்கப்பட, "ஜாவா சுந்தரேசன் மாதிரி தான் சாய் அப்யங்கர். முதலில் இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் சார் தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் அவரால் பணியாற்ற முடியவில்லை. எல்லோரும் சோகமானார்கள், எனக்கும் சோகம் தான் ஆனால் வேலை நடக்க வேண்டுமே. அப்போது சாய் அப்யங்கர் குழுவை சேர்ந்த திங்க் ம்யூசிக் சந்தோஷுக்கு கால் செய்தேன். சாய் அப்யங்கர் சூர்யா சார் படத்துக்கு சரியாக இருப்பாரா என்று கேட்டேன். அவரும் சரி, என் குழுவும் சரி முதலில் யோசித்தார்கள். ஆனால் அந்த பையனிடம் ஒரு எனர்ஜி இருக்கிறது. எப்போதுமே எனர்ஜி இருப்பவர்களை எனக்கு பிடிக்கும். என்னால் என்ன செய்ய முடியும் தெரியுமா? என தன்னை நிரூபிக்க கூடிய இடத்தில் இருக்கிறார். அந்த எனர்ஜி படத்துக்கு பயன்படும் என நினைத்தேன். அது 200 சதவீதம் உண்மையாகி இருக்கிறது. அடுத்து பார்த்தால் அல்லு அர்ஜுன் படத்துக்கு இசையமைக்கிறார். இப்போது எங்கள் படத்தின் பின்னணி இசை பணிகளில் இருக்கிறார்."

இறுதியாக சூர்யா மற்றும் வாட்டர்மெலன் ஸ்டார் வைத்து வரும் மீம் காட்டப்பட "இப்போது எல்லோரிடமும் போன் இருக்கிறது. சென்னை வெள்ளத்தின் போது கூட மொபைல் மூலமாக உதவிக்கு வந்த பலர் இருந்தனர். அந்த போனை வைத்து என்ன வேண்டுமானால் செய்யலாம். அதை சரியாக, புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள்." என பதிலளித்தார் ஆர்ஜே பாலாஜி.