விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கியுள்ள படம் 'ஜனநாயகன்'. விஜயின் கடைசி படமான இதில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ் எனப் பலரும் நடித்துள்ளனர். ஜனவரி 9ம் தேதி வெளியாக இருந்த இப்படம் சென்சார் சான்றிதழ் தொடர்பான சிக்கலால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
உயர்நீதி மன்றத்தில் இருந்த வழக்கு ஜனவரி 15ம் தேதி உச்சநீதிமன்றம் சென்றது. ஆனால் உச்சநீதிமன்றம் இவ்வழக்கில் தலையிட முடியாது எனக் கூறிவிட்டது. 20ம் தேதிக்கும் மேல் மீண்டும் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்துக்கு வர இருக்கிறது. சென்சார் தொடர்பான சிக்கல்கள் நீடித்துக் கொண்டே இருப்பதால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பதே கேள்விக்குறியாகி இருக்கிறது. எனவே 'ஜனநாயகன்' படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளது படக்குழு என ஒரு தகவல் சில தினங்களாக பரவி வருகிறது.
இது குறித்து சினிமா வட்டாரங்களில் விசாரிக்கும் போது, இதற்கு துளியும் சாத்தியமே இல்லை, கண்டிப்பாக படம் தியேட்டருக்கு தான் வரும். ஏனென்றால் இப்படத்தின் அனைத்து வியாபாரங்களும் சேர்த்து கிட்டத்தட்ட 400 கோடிக்கும் அதிகமான வியாபாரம் நடைபெற்று உள்ளது. இதில் தியேட்டர் வியாபாரம் மட்டும் 300+ கோடி, அதில்லாமல் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் 110+ கோடிக்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வளவு செலவை ஒரு ஓடிடி நிறுவனம், ஒரே ஒரு படத்துக்கு செய்யுமா? இது மட்டுமில்லாது தியேட்டர் ரிலீசுக்கான வியாபாரங்கள் எல்லாம் முடிந்த நிலையில் அதை எல்லாம் மாற்றுவது மிகப்பெரிய வேலை. இதற்கும் மேலான ஒரு காரணம் இது என்னதான் `பகவந்த் கேசரி' பட ரீமேக்காக இருந்தாலும், விஜயின் அரசியல் வருகைக்கு வலு சேர்க்கும் படியான விஷயங்களும் படத்தில் இருக்கிறது. அப்படியான ஒரு படத்தை விஜய் கண்டிப்பாக தியேட்டருக்கு கொண்டு வர தான் நினைப்பார். எனவே `ஜனநாயகன்' நேரடி ஓடிடி ரிலீஸ் என்பது உறுதியாக நடக்காது.