மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள படம் `GDN'. பிரபல கண்டுபிடிப்பாளர் ஜி.டி.நாயுடுவின் பயோபிக் ஆக உருவாகியுள்ள இந்தப் படம், ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தொடர்பான பேட்டிகளை அளித்து வருகிறார் மாதவன். அப்படி சமீபத்திய பேட்டியில், ”நீங்கள் இந்த நாடு பற்றிப் பேசுவது, நீங்கள் நடிக்கும் ’துரந்தர்’ படம் Propagandaவாக இருக்கிறது, உங்களை சங்கி என விமர்சிக்கிறார்கள். இதுபோன்ற எதிர்மறை கருத்துகளை எப்படி கையாளுகிறீர்கள்” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த மாதவன், "எல்லோரும் அவர்கள் வளர்க்கப்பட்ட முறையின் வெளிப்பாடுகளாகவே இருக்கிறார்கள். எனக்கு சின்ன வயதில் இருந்து நம் நாடுதான் முக்கியம் எனச் சொல்லி வளர்த்திருக்கிறார்கள். என்னுடைய பதிவுகளிலோ, பேட்டிகளிலோ எந்த பார்ட்டியை பற்றியும், தலைவர்கள் பற்றியும் தவறாக பேசியதில்லை. யாராவது நல்லது செய்தால், உடனே பாராட்டி பதிவிடுவேன்.
ஒருவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டியது என்னுடைய கடமை என நினைக்கிறேன். ’இதுவரை என்னை விளம்பரப்படுத்து’ எனச் சொல்லி எந்தக் கட்சியும் என்னை கேட்டதே கிடையாது. எனக்கு இப்படியான கருத்துகளைப் படிக்கையில், ’சரி.. அவர்கள் என்னவோ பேசுகிறார்கள்’ என்றுதான் தோன்றும். அது, என் முடிவுகளை ஒருபோதும் பாதிக்காது. ஒரு விளையாட்டில் வெற்றிபெற்று நாட்டுக்குப் பெருமை சேர்க்கிறார் என்றால், அதனைப் புகழ்ந்து பதிவிடுவது சரி என நினைக்கிறேன். அது தவறு என யாராவது சொன்னால், அவர்களின் நோக்கம் என்ன என தெரிந்துகொள்ள நான் விரும்புகிறேன். ஓர் இந்தியனாக இருப்பது எப்படித் தவறாக இருக்கும் என எனக்குப் புரியவில்லை. ’துரந்தர்’ என்ற ஒரு படம் பாகிஸ்தானை மையப்படுத்தி இருக்கிறது. அங்கும் இந்தியாவில் நடப்பது மாதிரி நல்லது கெட்டது எல்லாம் நடக்கிறது. இதில் என்ன Propaganda இருக்கிறது எனப் புரியவில்லை. நான் ஒரு நடிகன், படத்துக்குத் தேவையானதை நடிப்பில் வெளிப்படுத்த வேண்டும். தனிப்பட்ட முறையில் இந்தியாவைப் பற்றிய பெருமையான கருத்துகளை பேசவும் நினைக்கிறேன். அது ஒரு குற்றம் கிடையாது" என்றார்.