நடிகர் துல்கர் சல்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்கள் குறித்து பேசி இருந்தார். அதிலிருந்த விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. அவற்றில் முக்கியமான விஷயங்கள் கீழே.
சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான லோகா படம் ஓடுமா என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தது என சொன்னீர்களே எனக் கேட்டதும்,
" `லோகா' படத்தின் பட்ஜெட் இரு மடங்கானது, யாரு அப்படத்தை வாங்க விரும்பவில்லை. நானும், டோவினோவும் அந்தப் படத்திற்குள் வந்தோம். ஆனாலும் நீங்கள் சில நிமிடங்களே இப்படத்தில் இருக்கிறீர்கள், அதற்கு ஏற்ப தான் நாங்கள் பணம் கொடுப்போம் என்றார்கள். சில படங்களில் நீங்கள் 32 நிமிடங்கள் வருகிறீர்கள் என்றால் அதற்கு இந்த தொகை தருவோம் என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள். எல்லோருக்கும் தங்களுடைய படம் நிச்சயம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை இருக்கும் தான். ஆனால் படம் வெளியாகும் வரை அதில் எந்த உறுதியும் கிடையாது. இப்போதே இந்தப் படத்தை நிறுத்திவிட்டால் எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்ற விவாதங்கள் நடந்த நாட்கள் கூட உண்டு" என்றார்.
ஓடிடி நிறுவனங்கள் இப்போது படங்களுக்கு கொடுக்கும் தொகையை குறைத்தது பற்றி கூறுகையில்,
"ஓடிடி நிறுவனங்களின் வருகை திரைப்படங்களின் பட்ஜெட்டில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. எனவே அதை சார்ந்து சினிமாவின் வியாபாரம் கணக்கிடப்பட்டது. எப்போது அவர்கள் படங்கள் வாங்கும் விலையை குறைத்தார்களோ, அதுவரை மலையாளத்தில் 200 - 250 புதிய படங்கள் உருவாகும் கணக்கு 60 ஆக குறைந்தது. அது மிக பயத்தை கொடுத்த காலம். சில நடிகர்கள் 6 மாதங்கள் வேலை ஏதும் இல்லாமல் கூட இருந்தனர்.
திடீரென ஒரு புதிய வியாபாரம் வந்து நம்மை கெடுத்தது, அது இப்போது கிட்டத்தட்ட இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. நாங்கள் அதற்கு பழகிக் கொண்டு வருகிறோம். மலையாள சினிமா எப்போதும் தியேட்டரை மையப்படுத்தியே இயங்கி வந்த ஒன்று. எனவே அவர்களால் மீண்டும் அதை நோக்கி நகர முடியும் என நினைக்கிறேன். அதுதான் சிறந்த வழியும் கூட" என்றார்.
நடிகர்களின் வேலை நேரம் என்பது குறித்த பேச்சுக்கள் இப்போது அதிகரித்து வருவதை பற்றி கூறுகையில்,
"மலையாளப்படங்களின் ஷூட்டிங் நடந்து கொண்டே இருக்கும். சில நேரங்களில் இரவு 2 மணி வரை கூட செல்லும். திடீரென ஒருநாள் பேக்கப் என சொல்வார்கள். அப்படி வளர்ந்த நான், என் முதல் தெலுங்குப் படத்தில் நடித்த போது, 6 மணிக்கு கிளம்ப சொல்லிவிட்டார்கள். நான் இவ்வளவு நேரம் இருக்கிறதே, இதில் நான் என்ன செய்வது என யோசித்தேன். அதுவே தமிழ் சினிமாவில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறைகள் இருக்கும். ஆனால் மலையாளத்தில் 35 - 45 நாட்கள் தான் படப்பிடிப்பு எனவே, அந்த காலகட்டத்தில் விடுமுறை இல்லாம படப்பிடிப்பு நடக்கும். திருவிழா வந்தாலும் செட்டிலேயே கொண்டாடுவோம்.
நான் தயாரிப்பாளர் ஆன பின்பு தமிழிலோ, தெலுங்கிலோ இருப்பது போல நடக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அந்த இடத்தில் குறிப்பிட்ட நேரம் தான் கெடு என்றால் முடித்துதான் ஆக வேண்டும். மேலும் சென்னையில் இருப்பவர்களை வைத்து தமிழ் படம் உருவாவது போல, கேரளாவில் இல்லை. அவர்கள் எல்லோரும் வெவ்வேறு இடங்களில் வசிக்கிறார்கள். ஷுட் இடையில் நானே ப்ரேக் கொடுத்தாலும், அவர்களுக்கு என்ன செய்வதென தெரியாது. மொத்தமாக படத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லலாம் என தான் சொல்வார்கள். ஒவ்வொரு மொழி சினிமா துறையும் அவர்களது விதங்களில் வேலை செய்கிறது. சில தொழிலாளிகள் உங்களைவிட சீக்கிரம் வந்து தாமதமாக திரும்புவார்கள். எனவே வேலையை முடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதேநேரம் உங்களது எனர்ஜியோ, கற்பனை வளமோ தடைபடும் போது சிறிது இடைவெளி தேவை என்பதும் உண்மை" என்றார்.
பெரிய நடிகர்கள் தங்களுடன் நிறைய உதவி ஆட்களை அழைத்து வரும் கலாச்சாரம் பற்றி பேச்சு வந்த போது,
"நான் இந்திப் படங்கள் நடிக்கும் போது என்னுடன் வரும் இரு நபர்கள் மட்டும் வந்தால், எனக்கு உட்கார ஒரு சேர் கூட கிடைக்காது. மானிட்டர் கூட பார்க்க முடியாது. நீங்கள் ஒரு பெரிய காரில் வந்து இறங்கி உங்களுடன் நிறைய நபர்கள் வந்தால் தான் நீங்கள் பெரிய ஸ்டார் என நம்புவார்கள் போல. விட்டால் சினிமா ப்ராப்பர்டியை விட்டு எறிவார்கள். எந்த மொழி சினிமாவை குறைகூறுவது என் நோக்கம் அல்ல. இந்தி சினிமா உலகின் அளவு மிகப்பெரியதாக இருக்கிறது. அவர்களுக்கு உள்ள தியேட்டர், சந்தை, இந்தி மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை, அவர்களின் படங்கள் அதிகம் பார்க்கப்படுவது. அது அந்த துறையில் பிரதிபலிக்கிறது என நினைக்கிறேன்." என்றார்.