தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. தற்போது இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் `அரசன்' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது உணவுப் பழக்கங்களைச் சைவமாக மாற்றிக் கொண்டது குறித்து பகிர்ந்திருந்தார். அதில் சிம்பு கூறிய போது, "எனக்கு முன்பெல்லாம் பிரியாணிதான் பிடிக்கும். நாம் இளமையாக இருக்கும்வரை என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். அந்த வயதில் நாம் துறுதுறுவென இருப்போம், உடல் எடை கூடாது. ஆனால், ஒருகட்டத்துக்கு மேல் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். என்ன மாதிரி உணவு சாப்பிட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு மக்களுக்குக் குறைவாக உள்ளது.
எனக்கு அரிசி சோறு மிகவும் பிடிக்கும். ஆனால், அதில் சர்க்கரை சத்து அதிகமாக இருக்கிறது என்ற சிக்கல் வரும்போது, காய்கறி அதிகம் எடுத்துக்கொண்டு பின்னர் அரிசி உணவு சாப்பிட்டால் பெரிய பாதிப்பு இருக்காது. இப்படியான சின்னச்சின்ன விஷயங்களைக் கவனமாக செய்தால் உதவிகரமாக இருக்கும். நான் இப்போது முழுக்க சைவமாக மாறிவிட்டேன்.
அந்த முடிவுக்குக் காரணம் ஆரோக்கியம் என்பதைத் தாண்டி ஓர் அடிப்படை எனச் சொல்வேன். அசைவ உணவுகளை உண்ட பின்னர் சோர்வாக உணர்கிறேன். சைவம் சாப்பிட்டால் அப்படியான உணர்வு எதுவும் இல்லை. புரோட்டின் தேவைகளுக்கும்கூட சைவத்தில் இருந்து கிடைக்கும் புரோட்டின்களை எடுத்துக் கொள்கிறேன்.
அதேசமயம், சைவம்தான் சிறந்தது என்று நான் சொல்லவில்லை. நான் சொல்லிவிட்டேன் என தடாலடியாக சைவத்துக்கு மாறுகிறேன் என மாறக்கூடாது. உங்களுடைய உடலுக்கான தேவையைப் பொறுத்துதான் எல்லாமே. ஓர் ஆடை வாங்க அவ்வளவு யோசிக்கிறோம். ஆனால், இது நம்முடைய உடல் சம்பந்தப்பட்டது. இதுதான் நம்மக்கு எல்லாமே, அதற்கு நாம் யோசிக்க மறுக்கிறோம். எனக்கு அந்த வயதில் இதெல்லாம் தெரியவில்லை. ஒருகட்டத்துக்கு மேல்தான் உடலைக் கவனிப்பது மிக முக்கியம் என உணர்ந்தேன்” என்றார்.