விஜய் நடிப்பில் ஏ வெங்கடேஷ் இயக்கி 2002ல் வெளியான படம் `பகவதி'. இப்படம் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் படம் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருந்தார் ஏ வெங்கடேஷ்.
பேட்டியில் அவர் "முதலில் தம்பி பாத்திரத்துக்கு தனுஷ் சாரை தான் மனதில் வைத்திருந்தேன். கதை எல்லாம் முடித்துவிட்டு ஷூட் போகும் சமயத்தில் `துள்ளுவதோ இளமை' படம் வெளியாகி இருந்தது. அப்போது தனுஷின் உருவம், தம்பி பாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. அடுத்ததாக அவர் `காதல் கொண்டேன்' நடிக்க இருந்தார். கஸ்தூரி ராஜா சாருக்கும் லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும் நல்ல பழக்கம்.
அதன் மூலமாக தனுஷ் சாருக்கு விஷயம் சொல்லப்பட்டு, அவர் என் அலுவலகத்துக்கு வந்தார். நான் கதை கூறியதும், `இதில் நான் என்ன செய்கிறேன்' எனக் கேட்டார். அப்போதுதான் புரிந்தது அவருக்கு ஏ வெங்கடேஷ் கதை சொல்ல அழைத்துள்ளார் என்பதை மட்டும் கூறி இருக்கிறார்கள். பிறகு தம்பி கதாபாத்திரம் என விளக்கியதும், `இல்ல சார் நான் அப்படி எல்லாம் நடிப்பதில்லை' என்றார். ஆனாலும் நான் `செந்தூரப்பாண்டி'யில் விஜயகாந்த் சாருடன், விஜய் சார் நடித்து B, C சென்டர்களில் இறங்கியது போல, உங்களுக்கு இந்தப் படம் அமையும் என சம்மதிக்க வைக்க முயற்சித்தேன். `காதல் கொண்டேன் வந்தாலே நான் B, C சென்டர்களில் இறங்கி விடுவேன்' என நம்பிக்கையாக கூறினார். என்னால் அதை மறக்கவே முடியாது. அதன்பிறகு தான் புதுமுகம் யாரையாவது நடிக்க வைக்க முயற்சி செய்து, ஜெய் நடித்தார்" என்றார்.
மேலும் இப்படத்தின் க்ளைமாக்ஸை மாற்றியது பற்றி கூறிய போது "`பகவதி'ல் விஜய் CM ஆகும் சூழலை தான் முதலில் க்ளைமாக்சாக வைத்திருந்தேன். படத்தில் அவரை தேர்தலில் நிறுத்துவதற்காக கேட்பார்கள், அதை மறுத்துவிடுவார். ஆனால் முதல் ஸ்க்ரிப்டில் அவர் சம்மதித்து படம் அரசியல் களத்துக்கு மாறும். கடைசியில் அவரை CM ஆக பதவி ஏற்க சொல்வார்கள், ஆனால் அவர் மறுத்துவிட்டு வேறு ஒருவரை தேர்வு செய்யுங்கள் என்பார். படப்பிடிப்பு செல்லும் வரை அந்த கதை தான் இருந்தது. அந்த சமயத்தில் ரஜினி சாரின் `பாபா' படம் வெளியானது, அதிலும் CM சம்பந்தமான காட்சிகள் வரும். ரஜினி சாரை CM ஆக சொல்லி பலரும் சொல்வார்கள், ஆனால் அவர் ஆகமாட்டார். ரஜினி சாரே அதை செய்யவில்லை, விஜய் சாருக்கு அப்படி வைத்தால் ஓவர் டோஸ் ஆகிவிடும் என பயந்தேன். இதை விஜய் சாரிடம் சொன்ன போது, முதலில் அவர் சம்மதிக்கவே இல்லை. பின்பு பேசி பேசி சம்மதிக்க வைத்து கதையை மாற்றினேன். பின்பு சர்காரில் அது போல ஒரு க்ளைமாக்ஸ் தான் இருந்தது. உண்மையில் அவருக்கு அப்போதே அரசியல் ஆசை இருந்தது. இப்போது யோசிக்கும் போதுதான் எனக்கே அதெல்லாம் புரிகிறது" என்றார் ஏ வெங்கடேஷ்.