மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், அனுபமா, ரஜிஷா, பசுபதி எனப் பலரும் நடித்து உருவாகி இருக்கிறது `பைசன்'. தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
நடிகர் பசுபதி பேசும் போது "இயக்குநர் இல்லாம சினிமாவுல ஒரு நடிகனால ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாது. எனக்கு ஒவ்வொரு படமும் முதல் படம் மாதிரிதான். நாளைக்கு ஷூட்டிங் என்றால், முதல் நாள் ஜுரம் வந்திடும். வயிறு சரியில்லாம போயிடும். முதல் நாள்ல ரொம்ப பயந்துகிட்டே இருப்பேன். ஒவ்வொரு நேரமும் நான் என்ன பண்ண போறேன் என்ன பண்ண போறேன்னு பயந்துகிட்டே இருப்பேன். எப்போதுமே அதை நிறைவேற்றுவது இயக்குநர் தான்.
லால் சாருடைய வாய்ஸ் ரொம்ப சிறப்பானது. அடி வயிற்றிலிருந்து அது வரும், எங்கேயோ இருந்து எமோஷன் சார் எடுத்துட்டு வருவாரு. நீங்கள் மலையாளத்தில் நடித்த தொம்மனும் மக்களும் படத்தின் தமிழ் ரீமேக்கில் (மஜா) உங்களுடைய ரோலில் நான் நடித்தேன். இப்போது உங்களோடு நடித்திருக்கிறேன். மதன் கூட எனக்கு நிறைய காட்சிகள் இருந்தன. Fantastic ஆக்டர் அவர். அதுக்காக மாரிக்கு தான் நன்றி சொல்லணும் . அவர் நடிக்கிறத பாத்து எனக்கு நாமும் நல்லா பண்ணனும்னு போட்டி மனப்பான்மை வரும்.
ரஜிஷா... உண்மையாவே நான் உனக்கு அப்பாதான். ஸ்பாட்ல அப்படித்தான் ஃபீல் பண்ணேன். அனுபமா கூட எனக்கு ஒரு சீன் இருந்தது. அவங்களுக்கு கல்யாணம் ஆகப்போகிற மாதிரி ஒரு சீன். அதில் எமோஷனல ஒன்னு பண்ணியிருப்பாங்க. நான் 'கலக்குறா இந்த பொண்ணு' அப்படின்னு மாரிகிட்ட சொன்னேன். அடுத்த சீன் எனக்கு டயலாக் வரல.
துருவ் விக்ரம் கபடி ஆடினத பாத்து மிரண்டுட்டேன். ஷூட் ஆரம்பித்து 3 நாள் கழித்து விக்ரம் போன் செய்து 'என்னை மாதிரியே அங்க ஒருத்தன் சுத்துவானே' எனக் கேட்டார். நான் விக்ரமிடம், நமக்கு நடிக்கிறதைத் தவிர வேற தொழில் தெரியாது. ஆனா துருவ் விக்ரம் இனி அப்படி இல்ல, கபடி கூட ஆடிப்பாரு என்றேன். இந்த படம் பாத்து நேஷனல் கேம்ஸ்ல இருந்து கூப்பிட்டாலும் கூப்பிடுவாங்க." எனப் பேசினார்.