R J Balaji Karuppu
கோலிவுட் செய்திகள்

" `கருப்பு' படத்திற்கு பல ரிலீஸ் தேதிகளை மறுத்தேன்!" - ஆர் ஜே பாலாஜி | Karuppu | R J Balaji

மாதக்கணக்கில் ஷூட் நடக்காமல் இருந்தது. ஆனால் அந்த நேரம் எல்லாம் தெரிந்தோ, தெரியாமலோ நாங்கள் செய்த தவறுகளை திருத்திக்கொள்ள பயன்பட்டது.

Johnson

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்திற்கு திரைப்படச் சான்றிதழ் கிடைத்துள்ளது. சமீபத்தில் பேட்டி அளித்த ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தின் ரிலீஸில் ஏற்பட்ட தாமதத்திற்கு என்ன காரணம் என விளக்கமாக கூறி இருந்தார்.

Karuppu

அதில், "மே 14, இந்த தேதிதான் வேண்டும் என நான் காத்திருந்தேன். முதலில் படம் தீபாவளிக்கு வருவதாக இருந்தது. ஆனால், இந்தப் படம் உருவாக்குவதில் நிறைய தாமதங்கள் ஏற்பட்டது. மாதக்கணக்கில் ஷூட் நடக்காமல் இருந்தது. ஆனால் அந்த நேரம் எல்லாம் தெரிந்தோ, தெரியாமலோ நாங்கள் செய்த தவறுகளை திருத்திக்கொள்ள பயன்பட்டது. அதன் பிறகும் ஜனவரி, பிப்ரவரி போன்ற மாதங்களில் தேதிகளைக் கொடுத்தார்கள். ஆனால், இந்தப் படம் பொங்கலுக்கு வரவில்லை என்றால் கோடை விடுமுறையில்தான் வர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். இது ஜாலியாக தியேட்டருக்கு வந்து பார்க்கிற, திருவிழா மனநிலையைக் கொடுக்கக்கூடிய படம். குடும்பமாக வந்து பார்த்து சூப்பராக இருந்தது என்று சொல்லும்படியான படம்.

அப்படி ஒரு படத்தை ஜனவரி 23, தேர்வு நடக்கும் நேரம், தேர்தல் பிரசார நேரம் போன்றவற்றில் வெளியிட முடியாது. தமிழ்ப் புத்தாண்டுக்குப் படத்தை வெளியிடச் சொன்னார்கள். ஆனால் படம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் தேர்தல் வந்ததும் பேச்சு மாறிவிடும். அடுத்து மே 1ஆம் தேதி சொன்னார்கள். தேர்தல் முடிவுகள் 4ஆம் தேதி வரும். எனவே, மீண்டும் அனைவரின் கவனமும் வேறு பக்கம் திரும்பிவிடும். எனக்குத் தோன்றியது என்ன என்றால், 4ஆம் தேதி ரிசல்ட், அதிலிருந்து 10 நாட்களில் இந்தப் பேச்சு ஓய்ந்துவிடும். IPLகூட சலிப்பாகி இருக்கும். கோடை விடுமுறையின் உச்சமாக இருக்கக்கூடிய நேரத்தில் வர வேண்டும் என நினைத்தேன். எனவே, மே 14ஆம் தேதியை தேர்வு செய்தேன். என்னுடைய தயாரிப்பாளரும் ஏற்றுக்கொண்டார்" என்றார்.

R J Balaji

மேலும் நேற்று சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் தேர்தல் முடிவுகள் சார்ந்து குழப்பங்கள் நீடிப்பதால் அதெல்லாம் ஓய்ந்ததும் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.