தமிழ் சினிமாவின் மூத்த சினிமா தயாரிப்பாளர் AVM சரவணன் இன்று அதிகாலை வயதுமூப்பு காரணாமாக காலமானார். இவரது மறைவிற்கு பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நடிகர் சிவக்குமார் அஞ்சலி செலுத்திவிட்டு வந்து பேசிய போது "73 வருடங்களில் 175 படங்களை எடுத்திருக்கிறார்கள். இந்த ஸ்டுடியோவில் நடிக்காத நடிகர்களே கிடையாது. சிவாஜி, கமல், எஸ் எஸ் ராஜன், வைஜெயந்தி மாலா என பலரை அறிமுகப்படுத்திய இந்த நிறுவனத்தில் நடிக்காத நடிகர்களே இல்லை. என்னுடைய சொந்த பெயர் பழனிச்சாமி, அதை சிவக்குமார் என மாற்றியது சரவணன் சார் தான். அவர் ஞாபகமாக தான், என்னுடைய மகன் சூர்யாவின் இயற்பெயராக சரவணன் என வைத்தேன்.
முதல் படத்தில் ஒரு முக்கியமான காதல் காட்சி ஒரு 500 அடியில் எடுத்தது, போய்விட்டது. அந்தப் படத்திலேயே இரண்டு மூன்று காட்சிகளில் மட்டும் வருவது போல மாறிவிட்டது. அதை நினைத்து அலுத்து கொண்டிருந்த பொது சரவணன் சார் வந்தார். சாரி சிவக்குமார் உங்களுடன் நடித்த பெண்ணுக்கும் உங்களுக்கும் மேட்ச் ஆகவில்லை, உங்களுக்கு சீனியர் போல இருந்தார். அதனால் உங்கள் காட்சியை அப்புச்சி நீக்கிவிட்டார். சீக்கிரமே உங்களுக்கு பெரிய வேடம் கொடுப்போம் தைரியமாக இருங்கள் என்றார்.
தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த படம் என 100 படங்களை பட்டியலிட்டால் அதில் ஒரு படமாக `உயர்ந்த மனிதன்' இருக்கும். அந்தப் படத்தில் என்னை நடிக்க வைத்தார்கள். அடுத்த தலைமுறையில் சூர்யாவுக்கு `பேரழகன்', `அயன்' என்றார் அமெரிக்க முடியாத இரண்டு படங்களை கொடுத்தார்கள். எனக்கு முதல் படத்தில் சம்பளம் 1000 ரூபாய். ஆனால் சூர்யா படம் செய்யும் போது நீ கேட்கும் சம்பளம் தருகிறேன் என சொல்லி செய்தார்கள்" என்றார்.