Rajiv Menon Praying with Anger
கோலிவுட் செய்திகள்

"நான் தவறவிட்ட ஹாலிவுட் பட வாய்ப்பு!" - ராஜீவ் மேனன் பகிர்ந்த சம்பவம் | Rajiv Menon

நான் அவரை சந்தித்தேன். என்னிடம் ஒரு கதை உள்ளது, நான் உங்களுடைய ஷோ ரீல் பார்க்கலாமா என்றார். நான் முன்பு பணியாற்றிய வீடியக்களை ஷோ ரீலாக காண்பித்தேன், அவருக்கு பிடித்தது.

Johnson

தமிழ் சினிமாவின் முதன்மை ஒளிப்பதிவாளர்கள் ஒருவர் ராஜீவ் மேனன். சினிமாவில் இயக்குநராகவும் பணியாற்றி வந்தவர், விடுதலை படம் மூலம் நடிகராக மாறினார். தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் சமீபத்தில் வெளியான `பேட்ரியட்' படத்திலும் நடித்திருந்தார். அப்படம் குறித்தான பேட்டியில் தனக்கு வந்த ஹாலிவுட் பட வாய்ப்பை இழந்தது பற்றி குறிப்பிட்டிருந்தார்.

Rajiv Menon

அதில் "எனக்கு மிக மோசமான ஒரு அனுபவம் உண்டு. அமெரிக்காவிலிருந்து இயக்குநர் ஒருவர் நான் பணியாற்றிக் கொண்டிருந்த ஏவிஎம் செட்டுக்கு வந்தார். நான் நிறைய விளம்பரங்கள் படமாக்கி இருப்பதாலும், ஆங்கிலம் பேசுவேன் என்பதாலும் அவரை என்னிடம் அனுப்பினார்கள். அவர் தனது கதையை என்னிடம் கொடுத்தார், அதனை சென்னையில் படமாக வேண்டும் என விரும்பினார். நான் அவரை சந்தித்தேன். என்னிடம் ஒரு கதை உள்ளது, நான் உங்களுடைய ஷோ ரீல் பார்க்கலாமா என்றார். நான் முன்பு பணியாற்றிய வீடியக்களை ஷோ ரீலாக காண்பித்தேன், அவருக்கு பிடித்தது. பின்னர் அவர் கொடுத்த கதையை படித்தேன், எனக்கு அந்தக் கதை பிடிக்கவில்லை. மேலும் நான் வேறொரு படத்தில் எனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவமும் ஏற்பட்டிருந்தது.

Manoj Night Shyamalan

அவரோ என்னுடன் பணியாற்ற விரும்பினார். ஆனால் எனக்கு பயமாக இருந்தது. ஏற்கெனவே ஒரு படத்தில் பணியாற்றி நொந்து போனோமே என நினைத்தேன். எனவே விளம்பர படங்களில் பணியாற்றுவதே போதும் எனத் தோன்றியது. எனக்கு படத்தில் பணியாற்றுவது எந்த உற்சாகத்தை தரவில்லை. அந்த இயக்குநர் யார் தெரியுமா, மனோஜ் நைட் ஷாயாமளன். அவரின் முதல் படம் Praying with Anger சென்னையில் படமானது. நான் அந்தப் படத்துக்கு நோ சொல்லி, அவரை மது அம்பாட்டிடம் அனுப்பி வைத்தேன். அவர் முன்பே சில ஹாலிவுட் படங்களில் பணியாற்றியதால் அவர் சரியாக இருப்பார் என நினைத்தேன். அவர் தான் அந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். பின்னர்  மனோஜ் ஹாலிவுட்டில் பெரிய ஹிட் படங்களை கொடுத்தார். ஆனால் அன்று என்னால் அவரை கணிக்க முடியவில்லை. நான் மோசமான முடிவுகளை எடுப்பதில் சிறந்த நபர். அப்படியான முட்டாள்தனமான முடிவுகளில் இதுவும் ஒன்று. ஒருவேளை அதனை செய்திருந்தால் ஹாலிவுட் படங்களில் பணியாற்றி இருந்திருப்பேன்." எனக் கூறி இருந்தார் ராஜீவ் மேனன்.