வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'அரசன்' படத்தில் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கின்றனர். கோவில்பட்டியில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், விஜய் சேதுபதி, வெற்றிமாறனின் எழுத்து திறனைப் பாராட்டி, அவருடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி தெரிவித்தார். படத்தின் கதை வடசென்னை உலகத்தில் நடப்பதாக கூறப்படுகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வருகிறது `அரசன்'. கடந்த 9ம் தேதியில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடந்து வருகிறது. இப்படம் வடசென்னை உலகத்தில் நடக்கும் கதை எனவும், இப்படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. எனவே இப்படத்தின் மேல் பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகி இருக்கிறது. விடுதலை படத்தில் வெற்றிமாறனுடனும், செக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவுடனும் பணியாற்றிய விஜய் சேதுபதி, இப்படத்தில் இருவருடனும் இணைந்து பணியாற்ற உள்ளார்.
இப்படம் பற்றி சமீபத்திய விருது விழா ஒன்றில் விஜய் சேதுபதியிடம் கேட்ட போது "உண்மையாகவே தெரியாது. வெற்றி சார் சொன்னார், சேது எழுதும்போது உங்களுடைய ஞாபகம் வருகிறது, எழுதட்டுமா என்று. உங்கள் ஞாபகத்தில் இருப்பதே சந்தோசம் தான் எழுதுங்கள் என்று கூறினேன், அவ்வளவு தான் வேறு எதுவுமே தெரியாது. நான் அவருடன் பணியாற்றி இருக்கிறேன். மிக சிறந்த எழுத்தாளர் மற்றும் இயக்குநர். அவருடைய அறிவோம் அக்கறையும் மிக ஆழமாக இருக்கும். அதை ரசித்திருக்கிறேன். நிறைய படித்திருக்கிறேன் அவரிடமிருந்து.
ஒருவரிடம் சும்மா உட்கார்ந்து பேசும்போதே நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்றால், வேலை செய்யும் பொழுது நிறைய நம்மை அறியாமலே கற்றுக் கொள்ளலாம் என நம்புவேன். அப்படியான சில இயக்குநர்களில் மிஷ்கினையும் சொல்லுவேன். சில இயக்குநர்களுடன் பணியாற்றுவது சுகமாக இருக்கும். அப்படியான சுகமான சந்தோசம் தான் அது. எனவே படத்தை பற்றியோ, எத்தனை நாள் நடிக்க வேண்டும் என்பது பற்றியோ எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. சரி நான் வருகிறேன் என சொல்லிவிட்டேன். அவருக்குள்ளேயே ஒரு சுய ஒழுக்கம், அர்ப்பணிப்பு இருக்கிறது. வரும் நடிகர் மேலே என்ன வைக்க வேண்டும் என்பதை அவர் ஒரு பொறுப்பாக எடுத்துக் கொள்வார்" எனக் கூறியுள்ளார்.