ஸ்டாண்ட் அப் காமெடியன், பிக் பாஸ், டிஜிட்டல் நட்சத்திரம் என பிரபலமான விக்கல்ஸ் விக்ரம், ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அறிமுக விழாவில், நண்பர்களுடன் வீட்டில் எடுத்த ‘நிலவை கொண்டு வா’ ரீல்ஸ் திடீரென மில்லியன் பார்வைகளை எட்டிய விதம், எஸ்.ஜே.சூர்யா, சிம்ரன் பாராட்டுகள், தேவா நேரில் நன்றி கூறிய உணர்ச்சி தருணம் வரை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்தார்.
ஸ்டாண்ட் அப் காமெடியன், பிக் பாஸ் பிரபலம், டிஜிட்டல் நட்சத்திரம் என பிரபலமானவர் விக்கல்ஸ் விக்ரம். இவர் இப்போது ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகிறார். 'லைட் வெயிட் பேபி' என்ற இப்படத்தை கே சி குரு இயக்க, விக்ரமுக்கு ஜோடியாக ஃபிட்னஸ் மாடல் ஆர்த்தி கிருஷ்ணா நடிக்கிறார். இப்படத்தின் அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய விக்கல்ஸ் விக்ரம் தனது முதல் வைரல் ரீல் உருவானது பற்றி பேசினார்.
அதில் "என் அப்பாவிற்கு இன்டர்நெட் பற்றி எதுவும் தெரியாது. தொடக்கத்தில் நான் என்னுடைய நண்பர்களுடன் எங்கள் வீட்டில் ஒரு அறையில் இருந்து தான் ரீல்ஸ்களை எடுத்து பதிவேற்றுவோம். ஒவ்வொரு நாளும் என்னுடைய தந்தையார், நானும் என் நண்பர்களும் காலையிலிருந்து இரவு வரை அறையில் இருப்பதையும், அதன் பிறகு என்னுடைய நண்பர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்வதையும் தான் பார்ப்பார்.
'நிலவை கொண்டு வா' என்ற பாடலை நாங்கள் ரீல்ஸாக எடுத்து பதிவேற்றினோம். அது வைரலானது. அந்த ரீல்சை போஸ்ட் செய்த சில நிமிடங்களில் பத்தாயிரம் பேர் பார்த்திருந்தனர். கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் ஒரு லட்சத்தை எட்டி இருந்தது. அதன் பிறகு அது ஒரு மில்லியனை கடந்து எங்கோ சென்று கொண்டிருந்தது. அந்த தருணத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா - சிம்ரன் மேடம் ஆகியோர் இது தொடர்பாக தங்களது கருத்துக்களை போஸ்ட் செய்தார்கள்.
திடீரென்று தேவா அவர்கள் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். நீண்ட நாள்களுக்குப்பிறகு அந்தப் பாடலை பிரபலப்படுத்தியதற்கு நன்றி என்றார், அதைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வந்தது. அவரிடம் அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் நீங்கள் மிகப்பெரிய லெஜன்ட். நிலவை கொண்டு வா பாடல் யாருடைய வாழ்க்கையை மாற்றியதோ தெரியாது. ஆனால் எங்களுடைய வாழ்க்கையை மாற்றியது. நிறைய சேனல்களுக்கு இன்டர்வியூ கொடுத்தோம் எங்களை பற்றி நாங்களே பேசினோம். இதை என் அப்பா ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்." என்றார்.