Keerthy Suresh Revolver Rita
கோலிவுட் செய்திகள்

`தொடரி' நடித்ததால்தான் `மகாநடி' படம் கிடைத்தது! - கீர்த்தி சுரேஷ் சுவாரஸ்ய பேட்டி | Keerthy Suresh

இதற்கு முன் காமெடி என்றால் `ரகு தாத்தா' நடித்தேன். ஆனால் அது வேறுமாதிரி காமெடி. தெலுங்கில் `உப்புக்கப்புரம்பு' என்ற படம் நடித்தேன் அது சமூக பகடி திரைப்படம். எனக்கு எப்போதும் காமெடி படங்கள் பிடிக்கும்.

Johnson

கீர்த்தி சுரேஷ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள `ரிவால்வர் ரீட்டா' படம் நவம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த கீர்த்தி, இந்தப் படம் ஒரு ஜாலியான குடும்பப் படமாக இருக்கும் என தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களையும் அளித்தார்.


ஹீரோவுடன் நடிக்கும் படம், நீங்கள் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் படம் என இரண்டும் செய்கிறீர்கள். இந்த தேர்வுகள் எப்படி நடக்கிறது?

"இரண்டையும் சமமாக கையாள்வதுதான். கமர்ஷியல் படங்களும் பிடிக்கும், நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களும் பிடிக்கும். நான் தேர்வு செய்யும் போது, நாம் இதற்கு முன்பு செய்த பாத்திரத்தில் இருந்து மாறுபட்டு இருக்கிறதா? என்பதை தான் யோசிப்பேன். இதற்கு முன் காமெடி என்றால் `ரகு தாத்தா' நடித்தேன். ஆனால் அது வேறுமாதிரி காமெடி. தெலுங்கில் `உப்புக்கப்புரம்பு' என்ற படம் நடித்தேன் அது சமூக பகடி திரைப்படம். எனக்கு எப்போதும் காமெடி படங்கள் பிடிக்கும். அதை பார்க்கையில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ, அது போலத்தான் படம்பிடிக்கும் போதும் இருக்கும். அழுத்தமான கதைகளை நடித்துவிட்டு, காமெடி படம் நடிக்கையில் மனதே இலகுவாகிறது. பெண் கதாபாத்திர மைய திரைப்படம் என வரும்போது அதில் நான் செய்யாத ஒன்று வருமா என பார்ப்பேன்"

Revolver rita

இந்தப் படத்தில் காமெடி + ஆக்ஷன் இரண்டுமே இருப்பது போல் தெரிகிறது. காமெடி - ஆக்ஷன் இரண்டிலும் உள்ள சவால்கள் என்ன?

"இதில் உள்ள ஆக்ஷன் சூழ்நிலையால் நடக்கும் ஆக்ஷன் தான். அதிரடியான ஆக்ஷன் கிடையாது. காமெடி மிகவும் கடினமான ஒன்று. ஒருவரை அழ வைப்பது எளிது, சிரிக்க வைப்பது கடினம். ஆக்ஷனுடன் சேர்த்து அந்த காமெடியை கொண்டு வருவது ஒரு சவாலாக இருந்தது"

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பணியாற்றுவது எப்படி இருக்கிறது?

"நிறைய மொழிகளில் பணியாற்றுவது, அதுவே ஒரு புது அனுபவமாக இருக்கும். ஒவ்வொரு மொழி சினிமாவும் ஒவ்வொரு மாதிரி. தொடர்ந்து ஒரே மொழியில் இல்லாமல், வெவ்வேறு மொழிகளில் பயணிப்பது எனக்கு பிடித்திருக்கிறது. நான் ஒரு தெலுங்கு படம் நடித்துக் கொண்டிருக்கும் போது, என்னுடைய உதவியாளரிடம் தமிழில் பேசிவிட்டு, ஹேர் ஸ்டைலிஸ்ட் உடன் இந்தியில் பேசிவிட்டு, செட்டில் தெலுங்கு பேசுவதை பார்த்துவிட்டு அந்தப் பட இயக்குநர் கவனித்து சொன்னார். அவர் சொல்லும் போதுதான் நானே அதை உணர்ந்தேன். தினசரி நான் எல்லா மொழிகளையும் பயன்படுத்துகிறேன். அது சவால் என்பதை தாண்டி, எனக்கு மிகவும் பிடித்த விஷயம், ரசித்து செய்கிறேன்"

Mahanati

`மகாநடி' பற்றி இன்னும் மக்கள் பேசுகிறார்கள். அதை நினைக்கையில் என்ன தோன்றுகிறது?

"அந்த அடையாளத்தை என்னால் கூட மாற்ற முடியவில்லை. எத்தனை படங்கள் நடித்தாலும், அது என்னுடைய அடையாளமாக இருப்பது மகிழ்ச்சியான விஷயம். அதே சமயம் அதை தாண்டி இன்னொன்று செய்வது சவாலான விஷயம். இப்போது அதை பற்றி நினைக்கும் போது, இந்தப் படத்தை, இவ்வளவு சிறிய வயதில் நான் நடித்தேனா என எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. அதை என்னால் செய்ய முடிந்தது என்பது கடவுளின் அருள் தான். இதற்கு பின்பும் நிறைய பயோபிக் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. ஆனால் நான் இன்னும் சில வருடங்களுக்கு பயோபிக் நடிக்க வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறேன். ஏனென்றால் மகாநடி படத்தில் இருந்து நான் வெளியே வர எனக்கு பல காலம் பிடித்தது"

துவக்க காலங்களில் ட்ரோலுக்கு ஆளாகும் போது அதை எப்படி கையாண்டீர்கள்?

"இப்போதாவது இவற்றை நான் கவனிக்கிறேன். ஆனால் அப்போது இது எதையுமே பார்க்க மாட்டேன். செய்தியாளர்கள் அதனை ஒரு கேள்வியாக முன்வைக்கும் போதுதான் எனக்கு இப்படியான விஷயம் நடப்பதே தெரியும்"

Thodari

`தொடரி'யின் போது தான் அதிகமாக ட்ரோல் செய்தார்கள். அதை கடந்தது எப்படி?

"நாம் தவறு செய்வதே இல்லை என நான் சொல்லவில்லை. தவறு செய்துதான் கற்றுக் கொள்கிறோம். சமீபத்தில் செய்த படங்களை பார்க்கையில் கூட நான் செய்த தவறுகள் தெரிகிறது. ஆனால் இப்போதுவரை இந்தப் படம் ஏன் நடித்தோம் என்ற வருத்தமே கிடையாது. இதற்கு ஒரு உதாரணம் சொல்வதென்றால் நான் மகாநடி செய்து கொண்டிருந்த போது இயக்குநர் நாகியிடம் (நாக் அஷ்வின்) ஏன் என்னை தேர்வு செய்தீர்கள் எனக் கேட்டுக் கொண்டே இருப்பேன். தொடரி பட பாடலில், நீ இரயில் மேல் நிற்கையில் உன் கண்ணை பார்த்தேன். அப்படித்தான் உன்னை தேர்வு செய்தேன் என்றார். எனவே நான் ஒவ்வொரு விஷயமும் ஏதாவது ஒரு காரணத்துக்காக தான் நடக்கிறது என நான் நம்புகிறேன். ஒருவேளை இதற்காகத்தான் நான் அந்தப் படமே நடித்திருக்கலாம்"

அட்லீ ஒரு முறை பேட்டியின் போது உங்களை வைத்து பெண் மைய கதை ஒன்றை இயக்குவேன் என தெரிவித்திருந்தார், அது நடந்தால் நடிப்பீர்களா?

"அவர் இப்போது இருக்கும் நிலையில் பெண்மையை கதை எல்லாம் எடுக்க மாட்டார். ஆனால் அட்லீ கேட்டால் ஏன் இல்லை? கண்டிப்பாக நடிப்பேன்"

பெண் மையக் கதையாக உருவான லோகா படம் தென் இந்தியாவிலேயே அதிக வசூல் செய்த படமாக மாறி இருக்கிறது. அதை எப்படி பார்க்கிறீர்கள்?

"கல்யாணி நெடுநாள் தோழி. ரிலீஸ் ஆகி ஒருவராம் கழித்துதான் படம் பார்த்தேன். வீடியோ காலில் வாழ்த்தினேன். அவரின் வளர்ச்சி எனக்கு நெருக்கமாக தெரியும். ஷேஷம் மைக்கில் பாத்திமா என்ற படத்தில் புது வட்டார வழக்கில் பேசி இருப்பார், அது எனக்கு பிடித்த படம். அவருக்கு இந்த வெற்றி மிகவும் பொருத்தமானது"

ஹீரோவுக்கு இணையாக ஹீரோயினும் சம்பளம் பெற வேண்டும் என்ற வாதங்களை எப்படி பார்க்கிறீர்கள்?

"எப்போது நம்முடைய படங்கள் வெளியாகி, தயாரிப்பாளருக்கு அப்படியான லாபம் கிடைக்கிறதோ, அப்போதுதான் நாம் அதைக் கேட்க முடியும். எல்லோரும் சமமாகத்தான் உழைக்கிறோம். ஆனால் ஹீரோயினுக்கு அந்த சம்பளம் கிடைக்க வேண்டும் என்றால், நாளை என்னுடைய படங்களும் அப்படியான பணத்தை வசூலிக்க வேண்டும். பிறகு அதை மாற்றிக் கொள்ளலாம்"

சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொஞ்சம் எல்லை மீறி நடப்பது வழக்கமாகிவிட்டது. அதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

"நான் அந்த பக்கம் போவது குறைவு தான். ஆனால் இப்போது இருக்கும் பெரிய பிரச்னை AI. அது வரமும் சாபமும் என சொல்லலாம். மனிதர்கள் கண்டுபிடித்த தொழில்நுட்பம் மனிதனையே தாண்டி எங்கோ சென்று கொண்டிருக்கிறது. என்னுடைய சில படங்கள் எடிட் செய்து இருக்கையில் அது நிஜமான புகைப்படம் என நானே நம்பி விடுவேன். அது அவ்வளவு உண்மையான படங்கள் போல் தோற்றமளிக்கின்றன. ஒவொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விஷயம் அச்சமளிக்கும். அது இப்போது AIயில் வந்து நிற்கிறது"

Pet

சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாவதை பார்க்கையில் என்ன தோன்றுகிறது, இதிலிருந்து நாம் ஒரு பண்பட்ட சமூகமாக மாற என்ன செய்ய வேண்டும் என சொல்வீர்கள்?

"சில செய்திகளை பார்க்கையில் மிகவும் வருத்தமளிக்கிறது. நான் சமீபத்தில் UNICEFல் இணைந்துள்ளேன். அதன் மூலம் என்ன விஷயங்கள் என்னால் செய்ய முடியும் என பார்க்கிறேன். பெண்கள் பாதுகாப்புக்கு என்ன செய்யமுடியும்? எனக்கு தெரிந்த சினிமா மூலம் என்ன செய்யலாம்? என யோசித்து வருகிறேன். பல விஷயங்களை நாம் ஒன்று சேர்ந்தால் மாற்றலாம்"

நீங்கள் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர், சமீபத்தில் நடந்த நாய் சம்பந்தமான வாதங்களை எப்படி பார்க்கிறீர்கள்?

"இதற்கு இரண்டு தரப்பையும் நாம் மனதில் வைத்து சிந்திக்க வேண்டும். என் வாகன ஓட்டுனரின் மகன்களை இரண்டு முறை நாய் கண்டித்துள்ளது. நம்மை சுற்றி உள்ளவர்கள் பாதிக்கப்படும் வரை அதன் தீவிர தன்மை நமக்கு புரிவதில்லை. படப்பிடிப்பு தங்களில் இருக்கும் நாய்களுக்கு நான் உணவு அளிப்பதை செய்திருக்கிறேன். ஆனால், சமீபத்தில் தான் அந்த நாயின் நாக கீரலோ, எச்சிலோ கூட ரேபிஸ் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிந்து கொண்டேன். இதனை மிக கவனமாக கையாள வேண்டும்"

திருமணத்துக்கு பிறகு உங்களுடைய பொறுப்புகள் கூடி இருக்கிறதாக உணர்கிறீர்களா?

"உங்களுக்கு தான் திருமணம் என்ற வித்தியாசம் தெரிகிறது, ஆனால் நாங்கள் 15 வருட வாழ்க்கை பயணத்தை கடந்திருக்கிறோம். இதனை உங்களிடம் இருந்து ரகசியமாக வைத்திருந்தேன். எனவே எனக்கு பெரியதாக வித்தியாசம் எதுவும் தெரியவில்லை"

Keerthy, Antony

எதிர்காலத்தில் உங்கள் கணவருடன் நடிப்பீர்களா?

"அவரெல்லாம் இந்தப் பக்கமே வரமாட்டார். அவருக்கு இதற்கும் சம்பந்தமே இல்லை. விளம்பரத்தில் நடிக்க கூட கேட்டார்கள், ஆனால் அவர் மறுத்துவிட்டார்"

நடிகர்கள் இயக்குநராவது இப்போது நடக்கிறது, அது போல உங்களுக்கு இயக்குநர் ஆகும் ஆசை எதுவும் உண்டா?

"நான் ஐந்து வருடங்கள் முன்பே கதைகள் எழுத துவங்கிவிட்டேன். நான் இரண்டு மூன்று கதைகள் வைத்திருக்கிறேன். எல்லாமே வேறு வேறாக இருக்கும். அதில் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும், ஆனால் அது பெண்ணை மையமாக கொண்ட படமாக இருக்காது"

இது என்ன மாயம் - ரிவால்வர் ரீட்டா என பெரிய பயணம் உங்களுடையது. இதில் என்னவெல்லாம் கற்றுக் கொண்டீர்கள்?

"நவம்பர் 14 உடன் நான் சினிமா வந்து 12 வருடங்கள் நிறைவாகிறது. என் அறிமுகப்படம் இயக்கிய ப்ரியதர்ஷன் சாருக்கு மெசேஜ் அனுப்பினேன், என்னது 12 வருடம் ஆகிவிட்டதா என்றார். இப்போது ஒரு படத்தில் கேமியோ ரோலில் நடித்தேன். அதில் திரு சார் தான் ஒளிப்பதிவு. என் முதல் படம் கீதாஞ்சலிக்கும் அவர் தான் ஒளிப்பதிவு. 12 வருடம் கழித்து மீண்டும் உங்களுடன் பணியாற்றுகிறேன் எனக் கூறினேன். காலம் வேகமாக ஓடுகிறது, இதுவரை பணியாற்றிய அத்தனை படக்குழுவுக்கும் நன்றியுடன் இருக்கிறேன். 12 வருடம் ஆனாலும் இப்போதுதான் துவங்கியது போல ஒரு உணர்வு. இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும், பல கதாபாத்திரங்கள் நடிக்க வேண்டும். இந்தப் பயணத்தில் நிறைய கேலி கிண்டல்களை கடந்து இந்த இடத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி"

அடுத்த படங்கள்?

"இப்போது இந்தியில் ஒரு படம் நடித்து முடித்திருக்கிறேன். `அக்கா' என்ற நெட்ஃபிளிக்ஸ் இந்தி தொடர் முடித்திருக்கிறேன், மிஷ்கின் சாருடன் இணைந்து ஒரு தமிழ்ப்படத்தில் நடித்து வருகிறேன், விஜய் தேவரகொண்டாவுடன் தெலுங்குப் படம் ஒன்று நடிக்கிறேன், அடுத்து ஒரு பெரிய மலையாளப்படம் ஒன்று அடுத்த ஆண்டில் நடிக்க இருக்கிறேன்"