Ilaiyaraaja  Padmapani
கோலிவுட் செய்திகள்

"எனக்கு இசை தெரியாது.. தெரிந்திருந்தால் வீட்டிலேயே இருந்திருப்பேன்!" - இளையராஜா | Ilaiyaraaja

நான் 50 ஆண்டுகளுக்கு முன்பு இசையமைக்க தொடங்கியபோது அது வித்தியாசமாக இருந்தது, ஏனென்றால், அந்தக் காலத்தில் தொழில்நுட்பம் இல்லை. இன்று, மின்னணுக் கருவிகள் மற்றும் கீபோர்டு மூலம் இசையை உருவாக்குவது எளிதாகிவிட்டது.

Johnson

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் பத்மபாணி விருது வழங்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா, சத்ரபதி சம்பாஜிநகரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு AIFF Chairperson நந்தகிஷோர் காக்லிவால், MGM University Chancellor அனுகுஷ்ராவ் கடம் மற்றும் ஒளி வடிவமைப்பாளர்  ரசூல் பூக்குட்டி ஆகியோரிடம் விருதைப் பெற்றுக் கொண்டார் இளையராஜா.

இந்த நிகழ்வில் இளையராஜா பேசியபோது, "என்னுடைய 1,541வது படத்திற்கான பின்னணி இசையை முடித்துவிட்டு இப்போதுதான் இங்கு (நிகழ்ச்சிக்கு)  வந்தேன். மக்கள் என்னிடம், ’ஒரு குறிப்பிட்ட பாடலையோ அல்லது மெட்டையோ எப்படி உருவாக்குகிறீர்கள்’ என்று கேட்கிறார்கள். நான் அவர்களிடம், எனக்கு இசை தெரியாது என்று சொல்கிறேன். அதனால்தான் நான் இன்னும் வேலை செய்து கொண்டிருக்கிறேன். இசையைப் பற்றி எனக்கு எல்லாம் தெரிந்திருந்தால், நான் அதில் தேர்ச்சி பெற்றேன் என்று நினைத்து வீட்டிலேயே இருந்திருப்பேன்” என்றார்.

தொடர்ந்து நவீன தொழிநுட்பம் மூலம் மாறிவரும் இசை பற்றி பேசியவர், "நான் 50 ஆண்டுகளுக்கு முன்பு 1968ஆம் ஆண்டு வாக்கில் இசையமைக்க தொடங்கியபோது அது வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால், அந்தக் காலத்தில் தொழில்நுட்பம் இல்லை. இன்று, மின்னணுக் கருவிகள் மற்றும் கீபோர்டு மூலம் இசையை உருவாக்குவது எளிதாகிவிட்டது. இது ஒவ்வொரு வீட்டிலும் இசையமைப்பாளர்களை உருவாக்க வழிவகுத்துள்ளது.

Ilaiyaraaja

நான் நவீன கருவிகளை மதிக்கும் அதேவேளையில், நேரடி இசைக்குழுவுடன் பதிவு செய்வதை இன்னும் விரும்புகிறேன். எனது இசைக்கலைஞர்களுக்கான ஒவ்வோர் இசைக்கருவியின் குறிப்புகளையும் நான் எழுதுகிறேன். மின்னணுக் கருவிகளை எனது இசைக்கலைஞர்கள் பயன்படுத்துவதையோ, மின்னணுக் கருவிகளையோ நான் எதிர்க்கவில்லை, ஆனால் இசையிலிருந்து வரும் உணர்ச்சி நேரடிக் கருவிகளில் மட்டுமே வர முடியும்" என்றார்.