நீலம் பண்பாட்டு மையத்தின் வானம் கலைத் திருவிழாவின் ஒரு பகுதியாக வேர்ச்சொல் இலக்கிய திருவிழா நடைபெற்றது. இதில் இலக்கியம், சினிமா துறைகளைச் சார்ந்த ஆளுமைகள் பலர் கலந்துகொண்டனர். விளிம்பு நிலை பார்வையில் இலக்கியமும், சினிமாவும் எனும் தலைப்பில் இன்று வெற்றிமாறன் பேசினார். இந்நிகழ்வில் அவரிடம், "உங்கள் பட கதாபாத்திரங்களின் கோபம் எதிர்ப்புணர்வு எனப் பார்க்கப்படாமல், சிலரால் வன்முறை எனப் பார்க்கப்படுகிறது. இதனை எப்படி சமன் செய்யலாம் என நினைக்கிறீர்கள்" எனக் கேட்கப்பட்டது.
அதற்குப் பதில் சொன்ன வெற்றிமாறன், "அது போன்ற விமர்சனங்களுக்காக நான் எதையும் சமன் செய்ய விரும்பவில்லை. தற்போதைய தேவை சமத்துவம் என்றால், அதை எப்படியாவது அடைய வேண்டும். அதற்கான வழி வன்முறை என்றாலும் தவறில்லை. உடல்ரீதியான வன்முறையாக இல்லாமல் நம்முடைய வேலைகளின் மூலம் அதைச் செய்ய வேண்டும். மேலும் இப்படியான விமர்சனங்களைச் சொல்பவர்கள் எல்லோரும் privilege இடத்திலிருந்து பேசுகிறார்கள். சாதியைக் கொண்டாடும் படங்களை வாழ்வியல் படங்களை என்றும், சாதி எதிர்ப்புணர்வோடு எடுக்கப்படும், சாதி வேண்டாம் என்று சொல்லும் படங்களை சாதிய படங்கள் என்றும் சொல்லும் வழக்கம்தான் எப்போதும் இருக்கிறது. மேலும் இதற்கு முன்பெல்லாம் சாதிய படங்கள் வந்ததே இல்லை, சமத்துவத்தைப் பேசும் படங்கள்தான் வந்திருக்கின்றன எனச் சொல்லும் இயக்குநர்கள் எடுத்த படங்களின் பெயர்களைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அவர்களுக்கு அந்தப் புரிதல்கூட இல்லாமல் இருக்கிறார்கள் என்றுதான் சில சமயம் தோன்றும்.
என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு படத்தையும் நான் கற்றலாகத்தான் பார்க்கிறேன். ஓர் இயக்குநராக இருப்பது பெரிய அதிகாரம். 250 - 1000 பேர் வரையிலான நபர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இடத்தில் தினமும் இருக்கிறீர்கள். அந்தப் பொறுப்புணர்வோடு நாம் இருக்கிறோமா? போன படத்துக்கும் இந்தப் படத்துக்கும் மேம்பட்டிருக்கிறோமா என்ற கேள்விகளை நமக்குள்ளேயே கேட்கிறோம்.
நான் என் தவறுகளில் இருந்துதான் கற்றுக் கொள்கிறேன். நாம் எல்லோரும் சமத்துவம் என்பதை நோக்கிச் செல்லும் முயற்சியில் இருக்கிறோம். அந்த முயற்சி அவர்களிடம் இல்லை என்று பார்க்கிறேன். மேலும் திருப்பி அடிப்பது வன்முறை என்றால், அந்த வன்முறையை செய்யலாம்தான்!" என்றார்.