ச்பிரபல இசையமைப்பாளர் தேவா தனது `தேவா தி தேவா' இசை கச்சேரியை ஜனவரி 17ஆம் தேதி கரூரில் நடத்த இருக்கிறார். இந்த நிகழ்வுக்காக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "ஊரில் வந்து கச்சேரி செய்ய எனக்கு அவ்வளவு ஆசை. என் பாடல்களை எல்லாம் அவ்வளவு ரசிப்பார்கள். மெலடி, கானா, Folk எனப் பல வகை பாடல்கள் செய்திருக்கிறேன். அந்தப் பாடல்கள் எல்லாம் 30 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் வைரலாகிறது. நிறைய பேருக்கு `தூதுவளை இலை அரைச்சு', `எறுக்கஞ் செடியோரம்', `பஞ்சு மிட்டாய் சீல கட்டி' இந்தப் பாடல் எல்லாம் நான் போட்டது என தெரியவில்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஊடகங்கள் மூலம் அவை எல்லாம் என் பாடல்தான் என தெரியப்படுத்துவது மகிழ்ச்சி. இதெல்லாம் நான் போட்ட பாடல் என தெரியவில்லையே என்பது என் நெடுநாள் ஏக்கம். நிறைய பேர் நான் கானா பாட்டு மட்டும்தான் என முத்திரை குத்தினார்கள். கானா பாடல் ஒரு கண் என்றால் மெலடி இன்னொரு கண். கானா பாடல் இல்லை என்றால் நான் உலகம் முழுக்க ரீச் ஆகி இருக்க முடியாது. மெலடி பாடல்கள் இப்போது கச்சேரியின் போது ரசிக்கப்படுகிறது. அது மகிழ்ச்சி" என்றார்.
காப்புரிமை சார்ந்த சர்சைகள் இப்போது அடிக்கடி நடக்கிறது. உங்கள் பாடலும் சில படங்களில் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் காப்புரிமை கோரவில்லையே?
"காப்புரிமை கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும் அது எங்கேயோ சென்றுதான் முடிகிறது. எனவே நான் கேட்பதில்லை. இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். 90-களில் நான் இசையமைத்த நிறையப் பாடல்கள் இப்போது பேசப்படுகின்றன. இப்போது ஒரு படத்தில் கரு கரு கருப்பாயி பாடல் வந்து பெரிய ஹிட்டானது. அதை நான் 1992-ல் இசையமைத்து உருவாக்கினேன். ஒரு பொருள் வாங்குவதற்காக சமீபத்தில் மாலுக்குச் சென்றிருந்தேன். அப்போது தன் அப்பாவுடன் ஒரு சிறுவன் வந்தான். அப்போது அந்த அப்பா `கரு கரு கருப்பாயி பாடல் கேட்டாயே, இவர் தான் மியூசிக்' என என்னைக் காட்டினார். உடனே அந்த சிறுவன், அப்படியா `சூப்பர் அங்கிள்' எனக் கை கொடுத்தான். 'நான் அங்கிள் இல்லடா தாத்தா' எனக் கூறி அவனிடம் பேசினேன். இப்போது இருக்கும் இளம் தலைமுறையினருக்கு நான் தான் அந்தப் பாடலுக்கு இசை என தெரிகிறதே அது போதும் எனக்கு" என்றார்.