சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் `மா இன்ட்டி பங்காரம்'. ஜூன் 19இல் வெளியாகவுள்ள இப்படம் `எங்கள் தங்கம்' என்ற பெயரில் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இதன் செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய சமந்தா. "நான் நிறைய தமிழ்ப்படங்கள் நடிக்கவில்லை என்பதில் எனக்கு எப்போதும் வருத்தம் உண்டு. இன்னும் காலம் இருக்கிறது. அதைப் பார்த்துக் கொள்ளலாம். சிறந்த விஷயங்கள் நடக்கும் என நம்புவோம். `எங்கள் தங்கம்' படத்தில் நடிகையாக இல்லாமல், தயாரிப்பாளராக இப்படி ஒரு படம் உருவாக்குவது எவ்வளவு கடினம் என உணர்ந்தேன். நடிகையாக வாழ்வது குஷியானதுதான். கடந்த 5 நாட்களாக நடைபெறும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் கடினமாக இருந்தது. ஒரு படத்தை வெளியிடுவது எவ்வளவு கடினம் என இப்போது எனக்குப் புரிகிறது. நான் இந்தப் படத்தை நினைத்துப் பெருமைப்படுகிறேன். மிகச்சிறந்த குழுவுடன் இப்படத்தில் பணிபுரிந்துள்ளேன்.
எனக்கு நல்ல தமிழ்ப் படங்கள் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. சில இயக்குநர்களிடமும் நல்ல வேடங்கள் தரும்படி கேட்டிருக்கிறேன். சென்னைக்கு வரும்போதெல்லாம், நிறைய ரசிகர்களைச் சந்திப்பேன். இவ்வளவு இடைவெளிவிட்டு படங்கள் செய்தாலும், அவர்கள் ஆதரவு எனக்கு இருக்கிறது. அவர்களுக்குப் பெருமை தருவதாக இப்படம் அமையும் என நம்புகிறேன்.
இந்த ட்ரெய்லரில் வரும், ’நான் யார் தெரியுமா?’ வசனம்தான் இந்தப் படத்திலேயே அதிக டேக்போன காட்சி. நிஜ வாழ்க்கையில் அப்படி எப்போதுமே சொன்னதில்லை. அதனை எடுக்கும்போது, என் இயக்குநர் ’இன்னும் மாஸா சொல்லுங்க’ எனக் கேட்டார். மீண்டும் மீண்டும் சொல்லியும் ’பத்தல, பத்தல’ என்றார். 8ஆவது டேக்கில்தான் ஓகே ஆனது.
முதலில் இந்தப் படத்துக்கு சாய் பல்லவியைத்தான் அணுகினோம். எங்களின் தயாரிப்பு நிறுவனம் Tralalaவில் தரமான பெண்களை பிரதானமாகக் கொண்ட படங்களை உருவாக்கும் நோக்கத்தில் இருக்கிறோம். சாய் பல்லவி மிக அருமையான நடிகை, அவர் இந்தப் படத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என நம்பினோம். அவர் மறுத்த பின்னர், கதையில் கொஞ்சம் மாற்றங்கள் செய்து, ஆக்ஷன் எல்லாம் அதிகம் சேர்த்து எனக்கு என மாற்றினோம். எனக்கு நடனம் ஆடுவதைவிட, ஆக்ஷன் காட்சிகள் நடிப்பது எளிமையாக இருக்கும். ஆக்ஷனில் நம்பகத்தன்மை இருப்பதற்காக, பில்டப் காட்சியோ, ஸ்லோமோஷன் காட்சியோ இருக்கக்கூடாது என முடிவு செய்தோம். மிக உண்மையாக இருக்கும்படி பார்த்துக் கொண்டோம். எல்லா சண்டைக் காட்சிகளையும் நான் சுயமாகவே செய்தேன். அதனால்தான் இந்தப் படம் மிக உண்மையாக இருக்கிறது" என்றார்.