விஜய் சேதுபதி, 'ஜெயிலர் 2' படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் பணிபுரிவது அவருக்கு பெரும் அனுபவம் எனக் கூறியுள்ளார். வில்லன் வேடங்களில் சுதந்திரம் இருப்பதால், அவற்றில் மட்டுமே நடிக்க விரும்புகிறார். வழக்கமான வில்லன் பாத்திரங்களில் நடிக்க விருப்பமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கிஷோர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அர்விந்த் சுவாமி, அதிதி ராவ் நடித்துள்ள படம் `காந்தி டாக்ஸ்'. மௌனப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஜனவரி 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படக்குழு பேட்டி ஒன்றை அளித்துள்ளது. அதில் விஜய் சேதுபதியிடம், இனிமேல் நீங்கள் வில்லன், கேமியோ ரோல்களில் நடிப்பதில்லை என கூறி இருக்கிறீர்கள், எதனால் அந்த முடிவு என கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி "நிறைய எமோஷனல் பிளாக்மெய்ல்ஸ் வருகிறது. எனக்காக இந்த ரோலில் நடி எனக் கேட்கிறார்கள். அது நான் ஹீரோவாக நடிக்கும் படங்களின் வியாபாரத்தை பாதிக்கிறது. எனக்கு உற்சாகம் கொடுக்கும் வில்லன் வேடங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன். எனக்கு வில்லன் ரோல் நடிப்பது மிகவும் பிடிக்கும், அதில் பெரிய சுதந்திரம் இருக்கிறது. கெட்டவனாக நடிப்பதில் நிறைய நல்லது இருக்கிறது, அதை நான் ரசித்து செய்வேன்.
ஆனால் மெதுமெதுவாக அதனை ஒரு வழக்கமான வில்லன் பாத்திரமாக மாற்றி வருகிறார்கள். அப்படி வழக்கமான, ஹீரோவை பற்றிய துதிபாடும் வில்லனாக நடிக்க எனக்கு விருப்பமில்லை. படத்தின் கதையில் ஒரு சமநிலையை நான் எதிர்பார்க்கிறேன். அதுதான் என்னை ஆர்வமாக்கும், பார்வையாளர்களுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும். ஆனால் அப்படியான ரோலாக வில்லன் ரோல் இல்லை. எனவே அதை செய்ய விருப்பமில்லை. ஹீரோவாக, வில்லனாக, கேமியோவாக என வெவ்வேறு பாத்திரங்களுக்கு கதை கேட்க இனி நேரமில்லை. எனக்கு மட்டுமே நேரம் ஒதுக்குவேன். ஆனாலும் `ஜெயிலர் 2' படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளேன். ஏனென்றால் எனக்கு ரஜினி சாரை பிடிக்கும். அவருடன் இருக்கையில் நான் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். பல ஆண்டுகளாக இந்த துறையில் இருக்கும் அவரிடம் கற்க நிறைய விஷயம் உள்ளது" என்றார்.