கோலிவுட் முழுக்க மிகப்பெரிய சர்ப்ரைஸ் அறிவிப்பாக வந்தது அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு துவங்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படி இணைந்தது இந்தக் கூட்டணி?
`புஷ்பா' படத்துக்கு பிறகு மிகப்பெரிய ஸ்டார் நடிகராக மாறிவிட்டார் அல்லு அர்ஜுன். உண்மையைச் சொல்லப்போனால் புஷ்பாவுக்கு முன்பு `அலா வைகுண்டபுரமுலோ' படம் வெளியாகி பெரிய ஹிட்டான சமயத்திலேயே தன் அடுத்த அடுத்த படங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதில் தீவிரமாக இறங்கி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார் அல்லு அர்ஜுன். அப்போதிருந்தே அத்தனை பெரிய இயக்குநர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்தார். அவர் பேசிய இயக்குநர்களில் பலர் அடுத்த படத்தின் கமிட்மென்ட் உடன் இருந்தார்கள். எனவே அவர் எதிர்பார்த்த அதிரடியான கூட்டணி எதுவும் உடனடியாக அமையவில்லை. அதன் பின்னர் `புஷ்பா' படம் வெளியாகி உலக லெவல் ஹிட்டானார் அல்லு அர்ஜுன். மீண்டும் அல்லு அர்ஜுன் பேச்சுவார்த்தையை துவக்கினார். அந்த லிஸ்ட்டில் இருந்த முக்கியமான இரண்டு பேர் அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜ்.
அல்லு அர்ஜுனை பொறுத்தவரை எப்படியாவது அட்லீ, லோகேஷ் கனகராஜ் படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார். புஷ்பா மூலம் அல்லு அர்ஜுனின் ரீச்சை அறிந்த அவர்களும் இந்த கூட்டணியை எப்படி நிகழ்த்தலாம் என வேலை செய்ய தயாரானார்கள். அப்படியே `விக்ரம்', `லியோ' என இரண்டு பெரிய ஹிட் கொடுத்தார் லோகேஷ், அட்லீயும் `ஜவான்' என்ற பாலிவுட்டின் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தார். அல்லு அர்ஜுன் `புஷ்பா 2' மூலம் பட்டையை கிளப்பினார். இந்த வைப் அடங்குவதற்குள் எப்படியாவது அடுத்தடுத்து இந்த வெற்றிக்கு கூட்டணி அமைந்தால் நன்றாக இருக்கும் என பேச்சுவார்த்தை தொடர்ந்தது.
திட்டமிட்டபடி அட்லீ இயக்கத்தில் படம் க்ளிக் ஆனது. தற்போது அந்தப் படம் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. அடுத்து லிஸ்டில் இருந்தது லோகேஷ் கனகராஜ். ஆனால் `கூலி' வெளியான பின், ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படம், `கைதி 2' ஆமீர்கான் படம், `விக்ரம் 2' என வரிசையாய் கமிட்மென்ட் வைத்திருந்தார். இடையில் அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கும் படமும் லிஸ்டில் இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக `கூலி' பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்கள் வர, எல்லாம் மாறியது. லோகேஷும் சைலண்டாக ஹீரோவாக நடிக்கும் `டிசி' படத்துக்கு நகர்ந்துவிட்டார். கூடவே அடிக்கடி அல்லு அர்ஜுன் உடன் சந்திப்புகளும் நடந்து வந்திருக்கிறது. இப்போது எல்லா பேச்சுவார்த்தைகளும் முடிந்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அட்லீ இயக்கத்தில் அல்லு நடிக்கும் `AA 22' படத்தின் பெருவாரி காட்சிகள் க்ரீன் மேட்டில் படம்பிடிக்கப்படுகிறது, கிராஃபிக்ஸ் நிறைய பயன்படுத்தப்படும் படமாக உருவாக்கி வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. அதை முடித்த கையோடு லோகேஷ் படத்தில் இணைய இருக்கிறார் ஐகான் ஸ்டார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 2026ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜின் மாறுபட்ட இயக்கத்தில், அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் இதுவரை ரசிகர்கள் காணாத ஒரு முற்றிலும் புதிய, அதிரடி தோற்றத்தில், இன்னும் சொல்லப்போனால் இதுவரை காணாத வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.