Dulquer Salmaan Kaantha
கோலிவுட் செய்திகள்

காந்தா | "படத்தின் FIRST HALF மட்டும் 5 மணிநேரம் சொன்னார்!" - துல்கர் பகிர்ந்த சம்பவம் | Dulquer

இந்தப் படத்தின் அளவுக்கு வேறு எந்த படத்திற்கும் ஸ்க்ரீப்ட் மீட்டிங்கில் கலந்து கொண்டதே இல்லை. அந்த நேரத்தில் 8 படங்களுக்கான கதைகள் கேட்டிருப்பேன். ஒவ்வொரு மீட்டிங்கும் 5 மணிநேரம் நடக்கும்.

Johnson

துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி, ராணா நடிப்பில் உருவாகி உள்ள படம் `காந்தா'. இப்படத்தை செல்வமணி செல்வா இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் துல்கர் சல்மான் பேசிய போது "இந்தப் படத்துடைய கதையை முதல்முறை கேட்டது 2019ல். ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. அந்த நரேஷனே மறக்க முடியாத சம்பவம் தான். மதியம் 3 மணிக்கு கதை சொல்ல வர சொல்லி இருந்தேன். எப்படியும் 6 மணிக்கு முடிந்துவிடும். எனவே இதை முடித்துவிட்டு டின்னர் ஒன்றுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தேன். 7.30 மணிக்கு மேல் ஆகியும் நரேஷன் முடியவில்லை. 'செல்வா எனக்கு ஒரு டின்னர் இருக்கிறதே' என்றேன். சார் ஒரு 10 நிமிடங்கள் தான், முதல்பாதி முடிந்துவிடும் என்றார். இவ்வளவு நேரத்தில் முதல் பாதிதான் முடிந்து இருக்கிறதா என அதிர்ச்சி ஆனேன். ஆனால் எனக்கு கதை மிகவும் பிடித்தது. எனவே இரண்டாம் பாதியை கேட்க ஒரு 5 மணிநேரம் ஆகும் என நான் அதற்கு தயாராகி போனேன். அவர் ஸ்பீக்கர் எல்லாம் எடுத்து வந்து இசையுடன் தான் கதை சொல்வார். 

செல்வா தமிழ் சினிமாவில் மிகப்பெரிய குரலாக ஒலிப்பார். சினிமா மீது தீவிர ஆர்வம் கொண்டவர். செல்வாவும் கனி சாரும் பேசுவதை கவனித்தாலே நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

கனி சார், சினிமா வரலாறு, அரசியல் என பல விஷயங்களை சொல்வார். இந்தப் படம் தாமதமாக ஒரு காரணம், இந்தக் கதையின் ஏதாவது ஒரு பகுதியை இன்னும் மெருக்கேற்றலாம் எனக் கூறினால், செய்யலாம் என்று அதை வைத்து எழுதி வேறு எங்கோ சென்று விடுவார். பின்பு மீண்டும் சொல்ல வேண்டிய கதைக்கு திரும்ப வருவோம். மீண்டும் வேறு டிராக்கிற்கு மாறும், மீண்டும் பழையபடி திரும்புவோம். இப்படித்தான் 5 வருடங்களாக செய்து கொண்டிருந்தோம். இந்தப் படத்தின் அளவுக்கு வேறு எந்த படத்திற்கும் ஸ்க்ரீப்ட் மீட்டிங்கில் கலந்து கொண்டதே இல்லை. அந்த நேரத்தில் 8 படங்களுக்கான கதைகள் கேட்டிருப்பேன். ஒவ்வொரு மீட்டிங்கும் 5 மணிநேரம் நடக்கும். நிறைய தாமதங்கள் நடந்தாலும் அதை தாண்டி இதனை செய்தே ஆக வேண்டும் என முடிவு எடுத்து நடத்தினோம்.

எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும். பள்ளியில் கூட மூன்றாவது மொழியாக தமிழ் படித்தேன். மலையாள இயக்குநர்கள் பலர் நான் பேசும் மலையாளத்தை விட தமிழ் நன்றாக பேசுகிறேன் என சொல்வார்கள். சினிமாவின் வரலாறு கோடம்பாத்தில் தான் இருந்தது. அங்கிருந்துதான் எல்லா மொழி சினிமாவும் வெளியேறி இருக்கிறது. அந்த கலாச்சாரம் மற்றும் வரலாற்றை இந்தப் படத்தில் கொண்டாடி இருக்கிறோம். அந்த ஸ்டுடியோ சார்ந்து நீங்கள் கேட்ட கதைகள் எல்லாம் இதில் இருக்கிறது. அதனால் தான் இந்தப் படத்தை தமிழ் தெலுங்கில் மட்டும் உருவாக்கி இருக்கிறோம். அந்த இரண்டு மொழிகளுக்கு தான் இந்தக் கதை மிக நெருக்கமாக இருக்கும்" என்றார்.