நடிகை ஹன்சிகா மோத்வானி சமீப பேட்டியில் தனது விவாகரத்து குறித்து பேசும்போது, குடும்பம் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும், கிளிக் பைட்டுக்காக பல வதந்திகள் வந்தாலும் விளக்கம் தர வேண்டிய அவசியம் இல்லை என்றார். தவறான ரயிலில் ஏறினால் இறங்கத் தெரிந்திருக்க வேண்டும், எந்த உறவிலும் நம்மை நாம் இழக்கக் கூடாது, முதலில் நம்மை நாமே மதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகை ஹன்சிகா. இவருக்கும் தொழிலதிபர் சோஹய்லுக்கும் 2022ல் திருமணம் நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம் இவ்விருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய ஹன்சிகா "என்னுடைய குடும்பம் எதற்காகவும் எனக்கு அழுத்தம் கொடுத்ததில்லை. க்ளிக் பைட்டுக்காக (திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்தது பற்றி) பல விஷயங்களை எழுதினார்கள். ஆனால் அதை பற்றி நான் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை, அது அவசியம் எனவும் நான் நினைக்கவில்லை. அதன் பொருட்டு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நீங்கள் தவறான ரயிலில் ஏறினால், அப்பயணத்தை முடித்தே ஆக வேண்டிய அவசியம் இல்லை. அதிலிருந்து இறங்க வேண்டும்.
எனது குடும்பத்தினர் இந்த விஷயத்தில் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர். என் அம்மாவும், சகோதரனும் எனக்கு துணை நின்றார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியான நபர். ஆனால் நானே ஒரு டார்க் ஸ்பேஸ் உள்ளே செல்வதை கவனித்த அவர்கள் `எதுவாக இருந்தாலும் அது உன் முடிவு' என்றார்கள். இப்போது வரை எங்கள் இருவருக்கு இடையே என்ன நடந்தது என்பது, எங்களுக்குள் ஒன்றாக தான் இருக்கிறது. அதை மூன்றாவது நபர் அறிந்து கொள்வதோ, அதை பற்றி கருத்து சொல்வதோ அவசியமற்றது.
எந்த ஒரு உறவிலும் நம்மை நாம் இழக்கவே கூடாது. முதலில் நீங்கள் உங்களை மதிக்க வேண்டும், அப்போதுதான் மற்றவர்கள் உங்களை மதிப்பார்கள். நான் காதலின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறேன், அது அழகானது. பின்னாளில் ஒரு காதல் என்னை தேடி வரலாம். ஆனால் இப்போது அப்படி எதுவும் இல்லை. அதற்கான நேரம் வரும் போது, இந்த பிரபஞ்சம் அதை நோக்கி என்னை அழைத்து செல்லும்." என்றார்.